குருவும், குயவரும்!
மண் பானைகளை வனைந்து கொண்டிருந்தார் குயவர். ஒருபுறம் பானை, குடம், சட்டி, கலயங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அருகில், ஆடு ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அவ்வப்போது, 'மே... மே...' என, அது சத்தமிட்டது.மெல்ல நடந்து அந்த வழியாக வந்தார் துறவி. பானை உருவாவதை பார்த்தபடியே தரையில் அமர்ந்தார். அவருக்கு மண் கலயத்தில் குடிக்க தண்ணீர் கொடுத்தார் குயவர். அதை குடித்தபடி, 'ஆட்டை நீ வளர்க்கிறாயா...' என்று கேட்டார்.'நான் வளர்க்கவில்லை... ஏதோ காட்டாடு இந்தப் பக்கமாக வந்தது. அதை கட்டிப் போட்டிருக்கிறேன்...''எதற்காக...''பண்டிகை வரப் போகிறதே... இறைவனுக்கு பலி கொடுக்க தான்...''என்ன பலியா...' வியப்புடன் வினவினார் துறவி.'ஆமாம்... திருவிழா அன்று பலி கொடுத்தால் விசேஷம். பலியை ஏற்று மகிழ்ந்து, வரம் கொடுப்பார் இறைவன்; சுபீட்சம் கிடைக்கும்...'இது கேட்டதும் கோபம் கொண்டார் துறவி.கையிலிருந்த மண்கலயத்தை ஓங்கி தரையில் அடித்தார். அது துண்டுகளாக சிதறியது. துறவியின் செயலை வெறித்து பார்த்தார் குயவர்.சிதறிய சில்லுகளை ஒன்று விடாமல் சேகரித்து குயவரிடம் நீட்டினார் துறவி.'என்ன இது...'கோபத்துடன் கேட்டார் குயவர்.'உனக்கு தான் பிடிக்குமே...''என்ன உளறுகிறீர். என் கலயத்தை உடைத்து பொறுக்கி கொடுக்குறீர். இது எனக்கு பிடிக்கும் என்கிறீர்; வம்புக்கு இழுக்கிறீரா அல்லது பித்து பிடித்து விட்டதா...'உஷ்ணம் தெறிக்க ஆத்திரப்பட்டார் குயவர்.'அப்படி எதுவும் இல்லை. உண்மையான அன்புடன் தான் கொடுக்கிறேன்...'பதற்றமின்றி கூறினார் துறவி.'அந்த கலயத்தில் என் உழைப்பு அடங்கியிருக்கிறதே... அதை உடைக்க எப்படி சம்மதிப்பேன். உடைந்தது எனக்கு பிடிக்கும் என்று யார் கூறியது...''இறைவன் படைத்த உயிரினத்தை கதற, கதற பலியிடலாம். அதை மகிழ்ந்து ஏற்று இறைவன் வரம் தருவான் என நீ நம்புகிறாய். எந்த தாயாவது குழந்தை கதறுவதை சகிப்பாளா... உன்னிடம், இறைவன் எதை கேட்கிறார்; நீ, எதை அளிப்பாய்; அவர் உருவாக்கியதை அவருக்கே படைப்பாயா... அன்பு என்ற மலரால் பூஜை செய். உயிரினங்களுடன், கருணையுடன் வாழ்ந்தால் சிறப்பு பெறுவாய்...' மென்மையாக கூறி புறப்பட்டார் துறவி.அறிவுரையை கேட்டதும் கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து விட்டார் குயவர்.குழந்தைகளே... அன்பை அனைவருக்கும் பரிசளிப்போம்!- சுந்தரி காந்தி