உள்ளூர் செய்திகள்

புவியும், மிதிவண்டியும்!

பள்ளியில் வகுப்பு முடிந்தது. சகோதரிகள் புவியரசியும், கவியரசியும் வீடு திரும்பினர். அன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்தபடி நடந்தனர்.மிதிவண்டியில் வந்த தோழியிடம், ''மிகவும் அழகாய் இருக்கிறது. இதன் விலை இரண்டாயிரம் ரூபாய் இருக்குமா...'' என கேட்டாள் புவி.''இது வெளிநாட்டில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்டதால் விலை, 12 ஆயிரம்...'' என்றாள் தோழி.'அப்பாவிடம் கூறி, இதுபோல் ஒன்று வாங்க வேண்டும்'மனதில் முடிவு செய்தபடி நடந்தாள் புவி.வீட்டிற்கு வந்ததும் விருப்பத்தை அப்பாவிடம் தெரிவித்தாள். அவளது கோரிக்கையை நிறைவேற்றுவதாய் சம்மதம் தெரிவித்தார். புவிக்கு திருப்தி ஏற்பட்டது.இரவெல்லாம் துாங்காமல் படுக்கையில் புரண்டார் அப்பா.''துாக்கம் வரலையா... உடம்புக்கு ஏதாவது பிரச்னையா...''அவர் நிலை கண்டு கனிவுடன் விசாரித்தார் மனைவி.''மகள் புவி, மிதிவண்டி வாங்கி தருமாறு ஆசையாக கேட்டாள்; எப்படி வாங்குவது என தெரியவில்லை. அதனால் யோசனையில் விழித்திருக்கிறேன்...''''பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொடுங்கள்...''''அவள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதோ என்று தவிக்கிறேன். இந்த ஆண்டு மழை பொய்த்ததால், கிராமத்தில் விளைச்சல் எதுவும் கிடைக்க வில்லை. அதனால், வியாபாரம் சொல்லும்படியாக இல்லை; அவள் கேட்கும் மிதிவண்டி விலையோ மிகவும் அதிகம். வருமானம் இல்லாமல் எப்படி வாங்க முடியும்...'' கவலையுடன் கூறினார் அப்பா.மறுநாள் காலை -அப்பாவை சந்தித்தாள் புவி.மிகவும் கனிவுடன், ''இப்போது மிதிவண்டி வேண்டாம்; அப்புறம் வாங்கலாம்...'' என்றாள்.''ஏம்மா அப்படி சொல்ற...'' ''எனக்காக கஷ்டப்படாதீர் அப்பா. நல்ல வருமானம் கிடைத்ததும் வாங்கிக் கொள்ளலாம்...''தந்தையின் சிரமத்தில் பங்கெடுத்தாள் புவி. நெகிழ்ந்தபடி, 'மழை பெய்தால், விவசாயம் செழிக்கும். என் வியாபாரமும் வளர்ச்சி பெறும்; மகளின் விருப்பம் பூர்த்தியாகும்...' என மனமுருகி இயற்கையிடம் வேண்டுதல் செய்தார் அப்பா.பட்டூஸ்... இருப்பதை வைத்து, சிறப்புடன் வாழக் கற்றுக் கொள்வோம்!ப.ராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !