உள்ளூர் செய்திகள்

பொய்யை மறைக்க பொய்!

ராமனுக்கு, 13 வயதாகிறது. காரணமே இல்லாமல் பொய் பேசுவான். இதை கண்டு கவலை கொண்டார், அவன் அப்பா பரமேஸ்வரன். அவனை திருத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகின. பரமேஸ்வரனின் நண்பர் ரத்தினம், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். மகனிடம் உள்ள குறையை, அவரிடம் வருத்தத்துடன் கூறினார், பரமேஸ்வரன். ''அப்படி எந்த விஷயத்துக்காக பொய் சொல்வான்...'' கேட்டார் நண்பர். ''கடைக்கு அனுப்பி பொருள் வாங்கி வர சொன்னால், கூடுதலாக விலை கூறி மீதியை ஏதாவது வாங்கி சாப்பிடுவான்...'' ''சரி...'' ''நண்பர்களுடன் சைக்கிளில் வெளியே சுற்றுவான்; விசாரித்தால் நுாலகம் போனதாக பொய் சொல்வான்...'' சில நிமிடங்கள் யோசித்த நண்பர், ராமனை திருத்துவதற்கு யோசனை கூறினார். மறுநாள் - ''இந்தா, 10 ரூபாய்... ஒரு பேனா வாங்கி வா...'' ராமனை கடைக்கு அனுப்பினார், பரமேஸ்வரன். பேனாவுடன் திரும்பி வந்தான், ராமன். அது, ஏழு ரூபாய் என்பது பரமேஸ்வரனுக்கு தெரியும். பேனாவை வாங்கி பார்த்தார் பரமேஸ்வரன். ''பேனாவின் விலை என்ன...'' ''நீங்க தந்த பணம் பேனாவுக்கு சரியா போயிடுச்சு, அப்பா...'' வழக்கம் போல பொய் சொன்னான், ராமன். ''இது, 15 ரூபாய் பேனாவாச்சே... தவறுதலாக, 10 ரூபாய்க்கு கடைக்காரர் கொடுத்திட்டார் போல. விசாரித்து கூடுதல் பணத்தை கொடுத்திடலாம்...'' ''இல்லையப்பா, அது 10 ரூபாய் தான். கடைக்காரர் இல்லை; நான் வரும் போது தான் வெளியூருக்கு புறப்பட்டு போனார்... '' மீண்டும் பொய் கூறினான், ராமன். ''சரி, வா... இரண்டு பேரும் சென்று கடையில் விசாரிப்போம்...'' தீர்மானமாக அப்பா புறப்பட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் ராமன். வேறு வழியின்றி, பேனாவின் உண்மை விலையை கூறினான். ''பார்த்தாயா... ஒரு பொய்யை மறைக்க, இன்னொரு பொய்யை தேட வேண்டி உள்ளது...'' ''மன்னித்துவிடுங்கள், அப்பா. இனி பொய் சொல்ல மாட்டேன்...'' வருந்திய ராமனுக்கு, அந்த பேனாவையும், சில சாக்லேட்களையும் பரிசளித்தார் அப்பா. பட்டூஸ்... பொய் சிக்கலில் மாட்டிவிடும்; உண்மை பேசினால் சிக்கல் வராது. எஸ்.ஷீனா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !