உள்ளூர் செய்திகள்

அதிர்ஷ்டம்!

வேலை தேடி, தங்கள் கிராமத்தில் இருந்து நகர்ப்புறத்திற்கு கால்நடையாகவே சென்றனர், பொன்னனும், சோமுவும். ஊர் எல்லையை கடந்த போது, வழியில் ஒரு சிறிய இரும்பு பெட்டி கிடப்பதை கண்டனர். ஆச்சரியப்பட்ட இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 'என்ன பெட்டி இது. திறந்து பார்ப்போமா...' எனக் கேட்டான், பொன்னன். 'பணப்பெட்டியாக கூட இருக்கலாம். யாரேனும் வழியில் தவறவிட்டு இருக்கலாம். திறந்து பார்த்து உரிய நபரிடம் ஒப்படைத்து விடலாம்...' என்றான், சோமு. 'பணமாய் இருந்தால், நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக எண்ணி, அதை நாமே வைத்துக் கொண்டால் என்ன...' என்றான், பொன்னன். 'தவறு பொன்னா... அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது...' என்றான், சோமு. 'சரி சரி... திற... என்ன இருக்கிறது என பார்க்கலாம்...' என்றான், பொன்னன். பெட்டி பலமாக பூட்டப்பட்டிருந்தது. சோமுவால் திறக்க முடியவில்லை. பொன்னனும் சேர்ந்து கொண்டான். இருவரும் கடின முயற்சி செய்து, பூட்டை உடைத்து பெட்டியை திறந்தனர். உள்ளே பணமோ, நகையோ எதுவுமில்லை. அதே சமயம் பெட்டியில் இருந்து, 'ஹா... ஹா...' என, சிரித்தபடி, பூதம் ஒன்று வெளியே வந்தது. பூதத்தை பார்த்து மிரண்ட இருவரும், 'எங்களை ஒன்றும் செய்து விடாதே...' என, கெஞ்சினர். 'கவலைப்படாதீர்கள்... உங்களை நான் எதுவும் செய்ய மாட்டேன். பல நுாற்றாண்டுகளுக்கு முன், முனிவர் ஒருவரின் தவத்தை கலைத்து விட்டேன். அதனால் அவர் கோபம் கொண்டு என்னை இந்த பெட்டியில் சிறை வைத்துவிட்டார்... 'பல நுாற்றாண்டுகளாக இதில் அடைபட்டு இருந்தேன்... என்னை யாரும் விடுதலை செய்யவில்லை. இன்று உங்களால் விடுதலையானேன். இதற்கு பரிசாக ஏதேனும் தர விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பமானதை கேளுங்கள், தருகிறேன்...' என்றது, பூதம். சந்தோஷமான இருவரும், தங்களுக்கு வேண்டியதை கேட்கத் துவங்கினர். 'வாழ்நாள் முழுக்க வேலை செய்து கஷ்டப்படுவதை விட, பூதத்திடம் பொன்னும், பொருளும், பணமும் கேட்டு, மகிழ்ச்சியாக வாழலாம்...' என, எண்ணினர் இருவரும். அதன்படியே பொன், பொருள், பணத்தை வழங்கியது, பூதம். அளவிட முடியாத மகிழ்ச்சியடைந்தனர், இருவரும். எல்லாவற்றையும் கொடுத்த பூதம், அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையும் கொடுத்தது. 'நான் கொடுத்த பொருட்களை வைத்து, நீங்கள் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அச்செல்வம் அழிந்து நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுவீர்கள்...' என்றது. இருவரும், 'சரி...' என்றதும், பூதம் மாயமாக மறைந்தது. பூதம் கொடுத்த பொன்னையும், பொருளையும் வைத்து, நிலம் வாங்கினான், சோமு. நிலத்தை உழுது பயிரிட ஆடு, மாடுகளும், விவசாய கருவிகளும் வாங்கினான். விவசாயம் செய்ததுடன், ஆடு, மாடுகளையும் வளர்த்து வளம் பெற்றான். பூதம் கொடுத்த செல்வம் குறைவில்லாமல், இதன் வாயிலாக, மேலும் மேலும் பெருகியது. பொன்னனோ, பூதம் கொடுத்த செல்வத்தை தாறுமாறாக செலவழித்தான். ஆடம்பரமாக வாழ்ந்து, விரைவிலேயே செல்வத்தை அழித்தான். சில ஆண்டுகளுக்குப் பின், பூதம் மீண்டும் வந்தது. 'இருவருக்கும் ஒரே மாதிரிதானே பொன்னும், பொருளும் கொடுத்தேன். ஒருவன், அதையே மூலதனமாக்கி, செல்வத்தை பெருக்கி சந்தோஷமாக வாழ்கிறான். இன்னொருவன், ஆடம்பரமாக செலவழித்து வீணாக கஷ்டப்படுகிறானே...' என, கவலைப்பட்டது, பூதம். மறுபடியும் அவர்கள் முன் தோன்றாமல் மறைந்து விட்டது. குழந்தைகளே... அதிர்ஷ்டம் வந்து அள்ளிக் கொடுத்தாலும், அதை முறையாக செலவழித்து பயனடைய வேண்டும்; ஆடம்பரங்களால் எதிர்காலம் வீணாகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். - பெ. பாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !