சுத்தமும், சூழலும்!
கோவை மாவட்டம், காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 2011ல், 9ம் வகுப்பு படித்த போது, ஓவிய ஆசிரியையாக இருந்தார், அனிதா. ஓவியம் வரைய கற்றுத் தந்ததுடன், வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகளை நகைச்சுவை ததும்ப எடுத்துக் கூறுவார். சுகாதார செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். பள்ளி வளாகத்தில் குப்பையை எங்கு கண்டாலும் உடனே அப்புறப்படுத்தி விடுவார். அன்று, வகுப்பு இடைவேளையில், வராண்டாவில் நின்று கொண்டிருந்தோம். அவ்வழியாக வந்த ஓவிய ஆசிரியை, கையில் வைத்திருந்த, 100 ரூபாய் நோட்டை தவற விட்டுச் சென்றார். பாய்ந்து சென்று அதை எடுத்து கொடுத்தேன். புன்னகையுடன், 'கீழே கிடந்த பணத்தை எடுத்தது போல், எங்கு குப்பையைக் கண்டாலும், அதை எடுத்து உரிய தொட்டியில் போட, ஏன் யாரும் முன்வருவதில்லை...' என, புரியும்படி எடுத்துக் கூறினார். சுகாதார நடவடிக்கைகளில், மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஓவிய ஆசிரியை மேற்கொண்ட உத்தி அது என்பதை புரிந்து கொண்டோம். அதை பின்பற்றியதால், பள்ளி வளாகம் எப்போதும் சுத்தமுடன் திகழ்ந்தது.எனக்கு 29 வயதாகிறது. தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிகிறேன். இந்த பணி மீதான ஆர்வத்தை, பள்ளி காலத்தில் ஓவிய ஆசிரியை அனிதாவின் செயல்பாடுகளே ஏற்படுத்தியது. நல்ல பழக்க வழக்கங்களையும், ஒழுக்கத்தையும் கற்பிப்பதோடு நின்று விடாமல், அவ்வழியில் நடந்து வழிகாட்டியவரை மனதில் கொண்டுள்ளேன். - ம.தமிழி, கோவை.தொடர்புக்கு: 63850 99761