உள்ளூர் செய்திகள்

தான்தோன்றித்தனம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆ.நாகூர் மத்திய உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 10ம் வகுப்பு படித்தபோது, இலக்கிய மன்ற செயலராக இருந்தேன்.அரசியலில், தி.மு.க., வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. அன்றைய மன்றக்கூட்டத்தில் பேசிய ஆசிரியர் துரைசாமி, 'மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது...' என அறிவுரைத்தார். அவருக்கு பதிலடி தரும் வகையில், 'சுதந்திரத்துக்கு பாடுபட்ட, மூதறிஞர் ராஜாஜி, காங்கிரசிலிருந்து விலகி, சுதந்திரா கட்சி துவங்கியிருப்பது தங்களுக்கு தெரியவில்லையா...' என, வாதம் செய்தேன். இது பெரும் கரஒலியை பெற்று தந்தது. மறுநாள், தமிழாசிரியர் அங்கமுத்து, 'தான்தோன்றித்தனமாக பேசி திரியாதே... இந்த வயதில் கவனமுடன் படித்தால் தான், எதிர்காலம் சிறப்பாக அமையும்...' என, அறிவுரைத்தார். அதை ஏற்காமல், ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றேன். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த என் கல்வி இதனால், தடை பட்டது. மன உளைச்சலால் பாதிக்கப்பட்டேன். பின், உடல் உழைப்பில் கவனம் செலுத்தி குடும்பத்தை முன்னேற்றினேன். எனக்கு, 83 வயதாகிறது. கூலிவேலை உட்பட பணிகள் செய்தேன். பள்ளியில் தடம் மாறித் திரிந்த என்னை இடித்துரைத்து, உள்ளத்தில் ஒளியேற்றிய, தமிழாசிரியர் அங்கமுத்துவை வணங்கி வாழ்கிறேன். - கே.கே.கந்தசாமி, கோவை. தொடர்புக்கு: 94433 30964.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !