விதியின் விளைவு!
கோவை நகர முனிசிபல் பள்ளியில், 1966ல், 8ம் வகுப்பு படித்துபோது நடந்த சம்பவம்...வகுப்பாசிரியராக இருந்தார் கோபால். வகுப்பில் அவர் இல்லாதபோது கண்காணிக்க, ஒருவனை தலைவனாக நியமித்தார். குறும்பு செய்வோரை கண்டறிந்து பெயர் எழுதி கொடுக்க வேண்டியது அந்த மாணவனின் பணி.இதை நடைமுறை படுத்தியபோது தவறுகள் ஏற்பட்டன. தனக்கு வேண்டியவன் தவறு செய்தால் காட்டிக் கொடுக்க மாட்டான். இதை அறிந்து கண்காணித்து கவனமாக களைந்து சீரமைத்தார் வகுப்பாசிரியர். எல்லா மாணவருக்கும் பொறுப்பு ஏற்படும்படி சுற்றுக்கு விட்டார்.அதன்படி, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாணவரிடம் பொறுப்பு இருக்கும். யாருக்கும் பிரத்யேக சலுகை கிடைக்கவில்லை.பொறுப்பை தவறாக பயன்படுத்தினால், அடுத்து வருபவன் வகுப்பாசிரியர் கவனத்துக்கு கொண்டு செல்வான். இதனால் வகுப்பறை விதிகள் ஒழுக்கமுடன் கடைபிடிக்கப்பட்டன. எல்லாருக்கும் நீதி ஒன்று தான் என்ற எண்ணம் மனதில் பதிந்தது.எனக்கு, 73 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். வகுப்பாசிரியர் கோபாலிடம் பெற்ற பயிற்சியால் விதிகளை மதிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சமூகத்திலும் சட்ட விதிகளை தவறாது கடைபிடித்து வாழ்கிறேன்.- ரா.விஸ்வநாதன், கோவை.தொடர்புக்கு: 98655 33314