யெட்டி நண்டு!
பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் வாழும், வித்தியாசமான உயிரினம், யெட்டி நண்டு. இதன் அறிவியல் பெயர், கிவா ஹிர்சுடா. இந்த உயிரினத்தை முதன் முதலாக, 2005ல், கடலியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா இடையே உள்ள ஈஸ்டர் தீவுக்குத் தெற்கே, 2,200 மீட்டர் கடலின் அடிப்பகுதியில் சூடான நீரூற்றுகளுக்கு அருகில் காணப்படுகிறது. இது, 15 செ.மீ., நீளமுள்ளது. இதன் தனிச்சிறப்பு, கால்களில் காணப்படும் நீண்ட முடி போன்ற அமைப்பாகும். உண்மையில் அவை, மெல்லிய இழை போன்றவை. அவற்றின் மீது பல வகை நுண்ணுயிரினங்கள் வளர்கின்றன. அந்த நுண்ணுயிரிகளையே இந்த நண்டு முக்கிய உணவாக கொள்கிறது. கடலின் அடிப்பகுதியில் சூரிய ஒளி இல்லாததால், அங்கு வாழும் உயிரினங்கள், விசித்திரமான முறையில் உணவைப் பெறுகின்றன. அந்த வகையில் யெட்டி நண்டு, அதற்கு உணவாகும் நுண்ணுயிரினங்கள் வளர உதவுவதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இதன் உடல், வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. கண்கள், மிகவும் சிறியதாக இருக்கும். கடலின் ஆழத்தில் உயிரினங்களின் வாழ்க்கை முறையை அறிய, விஞ்ஞானிகளுக்கு ஆய்வுப் பொருளாக விளங்குகிறது, யெட்டி நண்டு. - வ.முருகன்