இளஸ் மனஸ்!
அ ன்புள்ள இந்துமதி ஆன்ட்டி, என் அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு போகின்றனர். வயதான தாத்தா, பாட்டியை அழைத்து போய் விட, வீட்டிற்கு அருகே முதியோர் இல்லத்தை தேடி கண்டுபிடித்தனர். அதை பார்க்க, அப்பா, அம்மாவுடன் நானும் சென்றிருந்தேன். ஒரு தனி வீட்டை, முதியோர் இல்லமாக மாற்றியுள்ளனர். கீழே உள்ள சிறு வராந்தா தான், அலுவலக அறை. சிறிய சமையலறை, அதை ஒட்டினாற் போல், எட்டுக்கு எட்டு படுக்கையறை. அறைக்கதவை திறந்ததும், குப்பென்று சிறுநீர் துர்நாற்றம் வீசியது. முதியவர்களுக்கு வழங்கும் உணவை, அப்பாவும், அம்மாவும் சாப்பிட்டு பார்த்தனர். என்னையும் சாப்பிட கூறினர். காலை உணவு தான். அதிகாலையிலேயே செய்து வைத்திருப்பர் என நினைக்கிறேன். இட்லியை தீய வைக்க முடியும் என, அப்போது தான் தெரிந்தது. கொதிக்க வைத்த புளித்தண்ணீரில், மிளகாய்துாள் போட்டது தான் சாம்பார். ‘இந்த இடத்திலா, தாத்தா, பாட்டியை விடப் போகிறீர்கள்...’ என்று கேட்டேன். ‘நீ சும்மா இருடா. உனக்கென்ன தெரியும். இங்கேயே இடமில்லை என்கின்றனர்...’ என, அதட்டினர். அவர்களின் அதட்டலுக்கு பயந்து, வாயை மூடி கொண்டாலும், மனம் வலிக்கிறது. வீட்டில் பெரிது பெரிதாக மூன்று படுக்கை அறைகள். ஒன்றில், அப்பா – அம்மா. மற்றொன்றில், நான். மூன்றாவது அறையில், வசதியாக இருந்த தாத்தா, பாட்டியை அழைத்து வந்து, இந்த முதியோர் இல்லத்தில் விடப் போகின்றனராம். இருவருக்கும் சேர்த்து, மாதம், 36 ஆயிரம் ரூபாய் செலுத்தி அங்கு விடுவதற்கு பதிலாக, அந்த பணத்தில், வீட்டிலேயே வேலைக்கு ஆளை நியமித்து, கவனித்துக் கொள்ளலாமே என்ற, என் வேண்டுகோள் மறுக்கப்பட்டது. நம் பெரியவர்களுக்கு ஏன் ஆன்ட்டி, இந்த நிலை? இப்படிக்கு, சுந்தர்ராஜன். அ ன்பு சுந்தர்ராஜன்... பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை முதியோர் இல்லத்தில் விடுவது கொடுமை! அதிலும், தங்களுடன் இருக்கும் பெற்றோரை அனாதைப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. பிள் ளைகள் வெளிநாடுகளில் இருக்கின்றனர்; பெற்றோரை தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாத நிலைமை என்றால் மன்னிக்கலாம்; ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கூடவே இருக்கும் பெற்றவர்களை சுமையாக கருதி, முதியோர் இல்லங்களில் விடுவது நன்றி கெட்ட செயல். இதற்கு முக்கிய மூல காரணம் முதுகெலும்பற்ற கணவன்மார்களே... மனைவி சொல்லே மந்திரம் என்று நினைப்பவர்களே... உதாரணத்திற்கு ஒன்று சொல்ல பிரியப்படுகிறேன். என் மாமனார், மாமியார் இருவரும் வயதானவர்கள். மாமியாருக்கு முதுமையின் காரணமாக மூளையின் செயல்பாடுகள் மிகவும் குறைந்து, ஞாபக மறதி, தெளிவற்ற சிந்தனை எனும் ‘செனைலிட்டி’ ஏற்பட்டு தன்னிலை மறந்து தெருக்கோடி வரை கேட்கும்படி கத்துவார். இயற்கை உபாதைகள் படுக்கையிலே தான். கழிவுகளை எடுத்து, தலை, முகம், சுவர் என்று பூசி விடுவார். என்ன செய்கிறோம் என்பதே தெரியாத நிலை. எந்த மருத்துவமனையிலும் வைத்து கொள்ள மறுத்து விட்டனர். உதவிக்கு ஆட்களும் நிலைக்க மாட்டார்கள். வீடு முழுதும் எத்தனை பினாயில் போட்டாலும் நாற்றம் அடங்காது. இந்த நிலையில், நரம்பு மருத்துவ நிபுணரான மருத்துவர் பிஸ்வகுமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து மாமியாரை காட்டினேன். எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித்த அவர் என் கணவரிடம் சொன்னார்... ‘இதனால் உங்கள் மனைவியின் ஆரோக்கியம், மனநிலை இரண்டும் மாறுபடும். அதனால் ஒன்று, உங்கள் அம்மாவை தனியாக ஓரிடத்தில் வையுங்கள் அல்லது உங்கள் மனைவியை வேறு வீட்டில் அமர்த்துங்கள்...’ மருத்துவர் போன பின், என் கணவர் என்னிடம் மிக தீர்க்கமாகவும், உறுதியாகவும் சொன்னார். ‘இதோ பார்... என் அம்மா இங்கு தான் இருப்பார். உன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், நீ தாராளமாக வெளியே போகலாம்...’ இந்த பதிலைக் கேட்டு பல பெண்கள் கோபப்பட்டிருக்கலாம்; வருத்தமடைந்திருக்கலாம். ஆனால், நானோ அந்த பதிலால் உள்ளம் சிலிர்த்தேன். என் கணவரை கண்டு பெருமிதமடைந்தேன். ஒரு ஆண் இப்படியல்லவா இருக்க வேண்டும்! இது நடந்து எத்தனையோ ஆண்டுகளாகி விட் டன. ஆனால், இன்று வரை என் கணவர் குறித்து பெருமைப்படும் விஷயம் இது! இப்படி தீர்க்கமாக இருந்து விட்டால் பின், முதியோர் இல் லமாவது, மண்ணாங்கட்டியாவது. நமக்குத்தான் அவை முதியோர் இல்லங்கள். பெரும்பாலானோருக்கு வியாபார ஸ்தலங்கள்; சம்பாதிக்கும் இடங்கள். எட்டுக்கு எட்டு அறை மூன்றை வாடகைக்கு எடுத்து, ஒரு அறையில் மூன்று கட்டில்கள் போட்டு, வாசல் வராந்தாவை தடுத்து அதை அறையாக்கி இரண்டு கட்டில்கள் போட்டு, சமைப்பதற்கு ஒரு ஆள், கவனிக்க இரண்டு ஆட்கள் என, கிராமத்து பெண்களுக்கு மாத சம்பளம், 15 ஆயிரம் ரூபாய் பேசி வரவழைத்து நடத்துவதற்கு பெயர் தான் முதியோர் இல்லங்கள். பெரும்பாலானவை இப்படித்தான் நடக்கின்றன. பெற்றோர்களை பெற்றவர்களாக மதித்தால், கூட்டுக்குடும்பத்தின் வசதி, பெருமைகளை உணர்ந்தால் எந்த முதியோர் இல்லங்களுக்கும் தேவையே இருக்காது! அன்புடன், இந்துமதி.