புலமை குறைபாடு!
மதுரை, அமெரிக்கன் கல்லுாரியில், 1984ல், பி.எஸ்சி., முதல் ஆண்டு தாவரவியல் பாட வகுப்பில் சேர்ந்தேன். அனைவரும், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினர்.பேராசிரியர்களும், ஆங்கிலத்தில் தான் பாடம் நடத்தினர். கிராமத்து பள்ளியில் படித்திருந்ததால் புரிந்து பதில் சொல்ல இயலாமல் தவித்தேன். அன்று, ஆங்கில பேராசிரியர் எட்வின் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். எதுவும் புரியாமல் அருகில் இருந்த நண்பர் சாரதியிடம் விளக்கம் கேட்டேன். இதைக் கண்டு அரட்டை அடிப்பதாக எண்ணி கோபத்துடன், 'கோ பேக்...' என்றார் ஆசிரியர். பாட புத்தக பையை துாக்கியபடி வெளியேறினேன்.மறுநாள், அது பற்றி நண்பரிடம் விசாரித்தேன். நிதானமாக, 'வகுப்பறையில், 'கோ வித் பேக்' என்றால் தான், பையுடன் வெளியே போக வேண்டும். பேராசிரியர் நேற்று சொன்ன, 'கோ பேக்' என்பதற்கு, 'வகுப்பறையின் பின் பக்கம் செல்' என்று அர்த்தம்...' என்று விளக்கினார். பின், கடுமையாக முயன்று ஆங்கில புலமையை வளர்த்தேன். என் வயது, 56; தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். கல்லுாரியில் படித்தபோது வகுப்பில் நடந்த நிகழ்வை மனதில் நிறுத்தி, மாணவர்களுக்கு ஆங்கில புலமையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறேன்.- மு.பாலசுப்ரமணியன், மதுரை.தொடர்புக்கு: 99423 45755