உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை ஒளி!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நகரவை மணிநகர் அரசு நடுநிலைப் பள்ளியில், 2007ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியையாக இருந்தார் சுமதி. அன்பு உள்ளம் படைத்தவர். பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த என்னிடம், பரிவுடன் நடந்து கொள்வார்.உயர்நிலையில் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்தேன். அங்கும் என் மதிப்பெண்களை கண்காணித்து, ஊக்கத்தொகை கிடைக்க வழிவகை செய்தார். கல்லுாரியில் படித்த போது, என் போக்குவரத்து செலவு மற்றும் உடைத் தேவைகளை, சொந்த பணத்தில் பூர்த்தி செய்தார்.ஒருநாள், 'இவ்வளவு உதவிகள் செய்கிறீர்களே... என்ன கைமாறு செய்ய போகிறேன்...' என்றேன். மிகுந்த கனிவுடன், 'வறுமையில் வாடும் பிள்ளைகள் படிப்பிற்கு, பிற்காலத்தில் உதவி செய்தால் போதும். கல்வியே வாழ்வின் அடித்தளம்...' என நம்பிக்கை ஏற்படுத்தினார்.தற்போது, என் வயது, 29; ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். அந்த ஆசிரியையின் அறிவுரைப்படி, இயலாதவர்களுக்கு முடிந்த அளவு உதவிகள் செய்கிறேன். என் குழந்தைகளும் அதை பின்பற்றும் விதமாக அறிவுரை தருகிறேன். வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிய நல்லாசிரியையை வணங்குகிறேன்.- ச.சங்கீதா, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !