ஏழையின் கனவு!
வெள்ளை நிற கார், பங்களாவுக்குள் நுழைந்தது. அதிலிருந்து இறங்கிய வீட்டு முதலாளி கல்யாணி, தோட்டக்காரர் மாதய்யனை அழைத்தாள்.''ரோஜா கன்றுகள் வாங்கி வந்திருக்கிறேன். காரிலிருந்து எடுத்து, பவுண்டனை சுற்றி வரிசையாக நடு...'' என்றாள்.மாதய்யன் வரிசையாக நட, ஒரேயொரு கன்று மீதமாகியது.''பின்புறம் எங்கேயாவது இதை நட்டு விடு...''உத்தரவிட்டாள் கல்யாணி.பங்களாவின் பின்னால் இருந்தது மாதய்யனின் வீடு. அங்கு அந்த கன்றை எடுத்து வந்தார். அவரது, 7 வயது மகள் வசந்தி ஆர்வமாக ஓடி வந்தாள்.''அப்பா... ரோஜா கன்றை தாருங்கள். நானே வளர்க்கிறேன்...'' மழலைக் குரலில் கேட்டாள்.குடிசைக்கு பின்னால் இருந்தது உரக்குழி. அதன் பக்கத்தில் சின்னஞ்சிறு கைகளால் நட்டு வைத்தாள். பங்களாவில் செடிகளை கவனமாக வளர்த்து வந்தார் மாதய்யன்.மகள் வசந்தி தினமும் காலை எழுந்ததும், நட்ட ஒற்றை ரோஜா கன்றை பார்க்க ஓடுவாள். பிஞ்சு கைகளால் அதற்கு தண்ணீர் ஊற்றுவாள்; காய்கறி கழிவுகளை உரமாக இடுவாள்.வசந்தியின் பராமரிப்பில் துளிர்த்து வளர்ந்தது ரோஜா கன்று.சில நாட்களுக்கு பின் -''அப்பா... '' மகள் குரல் கேட்டு வீட்டின் பின்புறம் சென்றார் மாதய்யன்.வசந்தி வளர்த்த ரோஜா செடி, அழகிய மொட்டுக்கள் விட்டிருந்தது. ஒவ்வொரு நாளும், சிவப்பு ரோஜா பூக்க துவங்கியது. அதை மகிழ்ச்சியுடன் சூடி, பள்ளிக்கு சென்றாள் வசந்தி.அன்று காலை -வேலை செய்து கொண்டிருந்த மாதய்யனை அழைத்தாள் கல்யாணி. ஓடி வந்தவரிடம், ''உன் பொண்ணு தினமும், தலையில் ரோஜா பூ சூடி செல்றாளே அது ஏது...'' என்று விசாரித்தாள்.மாதய்யன் விபரமாக எடுத்து கூறியதும், ''அப்படியா... என் பேத்திக்கு, ரோஜா பூ என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான், விதவிதமான நிறங்களில் பூக்கும் செடிகள் வாங்கி வந்தேன்; ஆனால், சரியாக பூக்கவில்லை; உன் வீட்டருகே நிற்கும் செடியில் பூப்பதை பறித்து என் பேத்தியிடம் கொடு...'' என கட்டளை பிறப்பித்தாள்.அதை ஏற்றார் மாதய்யன். ஒவ்வொரு நாளும், ரோஜா பூவை பங்களாவிற்கு எடுத்து சென்றார்.இதை ஏக்கத்துடன் பார்த்து அழுதாள் வசந்தி. ஆனால், அந்த செடியை நீர் ஊற்றி பராமரிக்கும் பணியை அவள் நிறுத்தவில்லை. இது கண்டு, ''ஏழைகளுக்கு கொடுப்பினை அவ்வளவு தான். வருத்தப்படாதே...'' என மகளை தேற்றினார் மாதய்யன்.அன்று பூவை வாங்கிய சிறுமி, பாட்டி கல்யாணியிடம் ஓடினாள். பின், ''நான் ஆசைப்பட்டால், எந்த பூவை வேண்டுமானாலும் வாங்கி கொடுப்பீங்க பாட்டி; ஆனால், வசந்தி பாவம் இல்லையா... அவளால் காசு கொடுத்து பூ வாங்க முடியுமா... அதனால், அவள் வீட்டில் வளர்க்கும் ரோஜா பூவை அவளே சூடட்டும்...'' என கனிவுடன் கூறினாள். தேவதையாக உயர்ந்து நின்றாள் அந்த சிறுமி.பட்டூஸ்... பிறர் உழைப்பை மதிக்க பழகினால் வாழ்க்கை அழகாகும்!- தி.வள்ளி