உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (234)

அன்பு மிக்க அம்மா...என் வயது, 18; இளங்கலை விலங்கியல் முதலாமாண்டு படிக்கும் மாணவி. எனக்கொரு சந்தேகம். பூரான்களுக்கு இறைவன் நிறைய கால்களை ஏன் வைத்தான். கூடுதல் கால்களால், பூரானுக்கு பிரத்தியேக பயன் உண்டா... பூரான் கடி மனிதர்களை கொல்லுமா... பூரான் முட்டை இடுமா, குட்டி போடுமா... பாம்புகளுக்கும், பூரான்களுக்கும் ஒப்புமை பண்புகள் உண்டா... பூரான் பற்றி தெளிவாக சொல்லுங்கள்.இப்படிக்கு,செல்வி.மரியா அருளானந்தம்.அன்பு மகளே... இறைவன் ஒரு கலாரசிகன். ஜீவராசிகளை படைக்கும் போது, ஒன்றுக்கு இறக்கை வைத்தான். ஒன்றை இறக்கை இருந்தும் பயனில்லாமல் ஓட வைத்தான். ஒன்றை இறக்கையும், கால்களும் இல்லாமல் ஊர்ந்து போக வைத்தான். ஒன்றை இரவில் செயல்பட வைத்தான். ஒன்றை பகலில் செயல்பட வைத்தான். ஒன்றை நீரில் நீந்த வைத்தான். ஒன்றை நிலத்திலும், நீரிலும் வாழ வைத்தான். மொத்தத்தில், கற்பனைக்கு எட்டாத ஜில்லியன் வகைகள். எதிரிகளிடமிருந்து தப்பிக்க, பூரான்களின் கால்கள் பெரிதும் உதவுகின்றன.பல கால்களுடன், புழு போல, சற்றே தட்டையான உடல் உடைய, நெளிந்து ஊரும் கணுக்காலிகள் தொகுதியில், பலகாலிகள் என்ற துணை தொகுதியாக உள்ள உயிரினம் தான் பூரான். இதை ஆங்கிலத்தில், 'சென்டிபீட்' என்பர். அதாவது, 100 கால்கள் இருப்பதாக பொருள். பூரான்களுக்கு, 15 முதல், 177 ஜோடி கால்கள் உள்ளன. இதை சரஸ்வதி ஊர்தி, தாடைக்காலி, நுாற்றுக்காலி என்றும் அழைப்பர். பூரானின் விஞ்ஞானப் பெயர் கைலோப்போடா. பூரானில், 8,000 வகைகள் உள்ளன; இதன் ஆயுட்காலம், 10 ஆண்டுகள். சில அபூர்வமாய், 56 ஆண்டுகள் வரை வாழும்.உலகின் மிகப்பெரிய பூரான், தென் அமெரிக்கா கண்டத்தில் அமேசான் காடுகளில் வாழும் ஸ்காலோபென்ட்ரா ஜைஜான்டியா என்பதாகும். இது, 20 செ.மீ., நீளம் உடையது. வவ்வால், எலி, சிலந்திகளை உண்ணும்.பூரானின் உடல் பல கட்டுகளாய் அமைந்திருக்கும். அதாவது, ஏழு முதல், 35 கட்டுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு கட்டுக்கும், இரண்டு கால்கள், கடைசி இரண்டு கட்டுகளில் கால் இருக்காது. அதற்கு பதிலாக, இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். தலையில் உணர்விழைகள் இருக்கும். அது, 12 - 100 கட்டுகளாய் அமைந்திருக்கும்; கால்கள் ஏழு கட்டுகளாய் இணைந்திருக்கும். கால் நுனியில், கூரான உகிர்கள் உள்ளன.பூரான்கள் இரையை விஷம் செலுத்தி தாக்கி உண்ணும். நிழலான, ஈரமான, கல் இடுக்குகளில், அழுகிய தாவரங்களில், வீட்டு குளியலறைகளில், தண்ணீர் குழாய் அடியில் வாழும். இது, இரவில் உலா வரும் சுகவாசி; இழந்த கால்களை புதுப்பித்து கொள்ளும் திறன் உடையது. பாம்புக்கு பூரான் அல்வா மாதிரி. வாரி சுருட்டி விழுங்கி விடும். பூரான் கடித்தால், மனிதர்களின் உயிர் போகாது. அதன் நச்சால் ஒவ்வாமை ஏற்படும். பூரான் கடித்தால் உடனே கல் உப்பை கரைத்து, கடி பட்ட இடத்தை கழுவ வேண்டும். ஒரு உபரி செய்தி: சீனர்கள் விஷ பகுதி நீக்கிய பூரானை வறுத்து, நொறுக்கு தீனியாய் தின்பர். அவர்களின் உணவு பழக்கம் அது.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !