உள்ளூர் செய்திகள்

உன்னால் முடியும் தம்பி!

''இந்த முறை பள்ளி சார்பில், பேச்சுப் போட்டியில் நீ தான் கலந்துக்க போகிறாய். நல்லா தயார் செய்து கொள்...'' உத்தரவிட்ட தமிழாசிரியரை பயத்துடன் பார்த்தபடி, ''ஐயா... அடுத்த முறை கலந்துக்குறேனே...'' என்றான் சீனு. ''பெயர் பட்டியலை இறுதி செய்து அனுப்பிட்டேன். நிச்சயம், நீ தான் போட்டியில் பேசப் போகிறாய்; இதில் எந்த மாற்றமும் இல்லை...'' முகம் சுருங்கி செய்வதறியாது நின்றான் சீனு.போட்டிக்கு எப்படி தயாராவது என்று தெரியவில்லை. மனப்பாடம் செய்து, சொன்னால், பாதியில் மறந்து விடுகிறது. எப்படி சமாளிப்பது... போட்டியில் தோற்றால், பள்ளிக்கு பெருமை கிடைக்காது. இதனால் பயந்து நடுங்கினான்.அவனிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தது. அது பயமாக வெளிப்பட்டது. அதை சரி செய்வதே தமிழாசிரியர் எண்ணமாக இருந்தது. அவனிடம் புதைந்து கிடந்த திறமை அவருக்கு நன்கு தெரியும். கண்டிப்பின் காரணமாக போட்டிக்கு தயாரானான் சீனு.போட்டி நாள் வந்தது. திடீரென தலைவலியும், காய்ச்சலும் வந்தது போல் தோன்ற தமிழாசிரியரிடம் ஓடினான் சீனு.''ஐயா... எனக்கு உடம்பு சரியில்ல...''''அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல... வா... போட்டி நிகழும் மேடைக்கு செல்லலாம்...''அழைத்துச் சென்றார் தமிழாசிரியர். ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்தனர். பதற்றத்தில் நெளிந்தான் சீனு. தயார் செய்திருந்தது எல்லாம் மறந்தது போல் தோன்றியது. நெஞ்சில் பந்து உருண்டு அடைத்தது. நிச்சயம் வெல்ல முடியாது; மற்றவர்கள் எல்லாம் சிறப்பாக பேசுவதாக தோன்றியது. பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான் சீனு.''உன் முறை வரும் போது அழைக்கிறேன். அதுவரை மரத்தடியில் பயிற்சி செய்; எதிரே இருக்கும் நடுவர்களையோ, சுற்றி இருப்போரையோ கண்டு பயப்படாதே. பயிற்சி செய்ததை தைரியமாக மேடையில் பேசு...''ஊக்கப்படுத்தினார் தமிழாசிரியர்.சிறு நம்பிக்கையுடன் பயிற்சி எடுத்திருந்ததை மீண்டும் சொல்லிப் பார்த்தான். மேடையில் எவ்வித தயக்கமும் இன்றி பேசி முடித்தான். பார்வையாளர்களின் கரவொலி காதை பிளந்தது.இரண்டாவது பரிசு பெற்றிருந்தான் சீனு.''அடுத்தமுறை நிச்சயம், முதல் பரிசு பெறுவாய்...''பாராட்டினார் தமிழாசிரியர்.இன்னும் சிறப்பாக பேசும் நம்பிக்கை துளிர்த்தது.குட்டீஸ்... முயற்சியும், பயற்சியும் வெற்றியை கொண்டு வரும். தாழ்வு மனப்பான்மை தோல்வியில் அமிழ்த்தி விடும்!- மாலா ரமேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !