உள்ளூர் செய்திகள்

எதிர்பாராதது!

மதுரை, அத்திப்பட்டி, ஆர்.எம்.பி.எஸ்.ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில், 2022ல், 12ம் வகுப்பு படித்த போது, தாவரவியல் பாடத்தில் மிகவும் ஆர்வம் கொண்டேன். கவனம் செலுத்தி படித்தேன். பொதுத்தேர்வில், முழுமையாக மதிப்பெண் பெறுவதை லட்சியமாக கொண்டு, இரவு, பகல் பாராது, கண் துஞ்சாது கடுமையாக உழைத்தேன். இதை அறிந்த தாவரவியல் ஆசிரியர் செல்வகுமார் மிகவும் உற்சாகமூட்டி உதவினார். ஒவ்வொரு நாளும் இரவு, 7:30 மணி வரை உடனிருந்து அக்கறையுடன் கற்பித்தார். தனித்தேர்வுகள் நடத்தி பயிற்சி தந்தார். அவற்றில் நல்ல மதிப்பெண் பெற்று வந்தேன். அரசு பொதுத்தேர்வு நெருங்கியது. நம்பிக்கையுடன் கவனம் எடுத்து விடைகளை எழுதினேன். ஆனால், தேர்வு முடிவு ஏமாற்றம் தந்தது. முழுமையாக மதிப்பெண் பெற இயலாததால் மிகவும் வருந்தினேன்.ஆனால், எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடந்தது. புகழ் பெற்ற கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. அதை எண்ணி மகிழ்ந்தேன். கடினமாக உழைத்தால் பலன் நிச்சயம் என்பதை உணர்ந்தேன். என் வயது, 18; பள்ளியில் தாவரவியல் பாடத்தை கற்பித்த ஆசிரியர், பிரத்யேகமாக எனக்கு நேரம் செலவிட்டது நெகிழ்ச்சி தருகிறது. அவர் பாதம் பணிந்து வணங்குகிறேன்.- செ.யோகமணி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !