முதல் உதவி!
துாங்கி எழுந்து வாசலுக்கு வந்தான் விமல். வீட்டு முன், ஒரே பரபரப்பாய் இருந்தது.எதிர் வீட்டில் புதிதாக குடி வந்திருந்தார் வருண். அவர் காரை சூழ்ந்தபடி கூட்டம் நின்றது.விமலின் அம்மாவும், அதில் இடம் பெற்றிருந்தார்.அருகில் சென்று விசாரித்தான் விமல்.நாய் மீது கார் மோதியது தெரியவந்தது. காலில் காயம் பட்டு வலியால் கத்திக்கொண்டிருந்தது நாய்.'தெருவில் சற்று கவனத்துடன் ஓட்டக் கூடாதா...'வசைப்பாடினர் அங்கு நின்றவர்கள். நாயின் சொந்தக்காரர் கடும் கோபத்தில் இருந்தார். வருணுடன் வார்த்தை தடித்தது. கைகலப்பு வருவது போல் இருந்தது. நிலமையை உன்னிப்பாக கவனித்திருந்த விமலின் தந்தை அங்கு வந்தார்.''வார்த்தையை கொட்டினால் அள்ள முடியாது; சற்று பொறுங்கள்...'' இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். அவரது அக்கறையான பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்து அமைதி அடைந்தனர்.உடனே, வீட்டில் இருந்த முதல் உதவி பெட்டியை எடுத்து வந்தான் விமால். வலியில் துடித்த நாயின் காயத்தை பஞ்சால் துடைத்தான். மருந்து போட்டான். நிவாரணம் கிடைத்ததும் நன்றியுடன் கூட்டத்தை பார்த்தது. பின் மெதுவாக நொண்டியபடி நடந்தது. கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். மாலை, 6:00 மணி - தெருவில் காலையில் இருந்த பரபரப்பு அடங்கி அமைதியாக காணப்பட்டது. தொலைவில் தட்டு தடுமாறி ஓடியது அந்த நாய். வலி குறைந்திருந்தது போல் தெரிந்தது.குழந்தைகளே... அவசரத்தில் கோபப்படுவதால் பயன் எதுவும் இல்லை. நிதானமாக சிந்தித்து செயல்படுவதே அறிவுப்பூர்வமான செயல்.