முனிவரும், முயல் குட்டியும்!
காட்டில் அரச மரத்தடியில் கண்களை மூடி கடுந்தவம் புரிந்தார் முனிவர். அங்கு ஓடி ஆடி வந்த முயல் குட்டி, முனிவர் மெலிந்த தேகம், உடுத்தியிருந்த உடை, ஜடா முடியை பார்த்து, தவறாக மதிப்பிட்டு, கேலி, கிண்டல் செய்தது.முயல் குட்டியின் செயலை ஞானக்கண்ணால் உணர்ந்தார் முனிவர். தவ வலிமையால், கிளி ஒன்றை உருவாக்கி, முயல் குட்டிக்கு புத்தி புகட்ட கட்டளையிட்டார். கிளியின் அறிவுரையை ஏற்காமல், தொடர்ந்து தொந்தரவு செய்தது முயல் குட்டி. சிறிய கற்களை முன்னங்கால்களால் துாக்கி வந்து முனிவர் மீது வீசியது. குறும்புகார முயல் குட்டியின் செயல் கண்டு, 'அறியா பருவம்; தெரியாமல் செய்கிறது' என எண்ணி, தன்னை சுற்றி முள்வேலியை உருவாக்கினார் முனிவர்.தவறை திருத்தி கொள்ளாமல், முள் வேலியை தாண்டி குதித்து வந்து எள்ளி நகையாடியது முயல் குட்டி. அதை திருத்த ஒரு ஓநாயை படைத்தார் முனிவர். அது, முயல் குட்டியை, முன்னங்கால்களால் பிடித்து துாக்கி, வாய் அருகில் எடுத்து சென்றது. ஓநாயின் கோர பற்களை பார்த்ததும் நடுங்கி பயத்தில் அலறியது.'ஐயோ.. காப்பாற்றுங்கள். என்னை, கடித்து குதறி பசியாற துடிக்கிறது ஓநாய்...' என கதறியது. அதன் பரிதாப நிலையை உணர்ந்த முனிவர், 'ஓநாயே... முயலை ஒன்றும் செய்யாதே... விட்டு விடு...' என்றார். முனிவரின் கட்டளைக்கு கட்டுப்பட்ட ஓநாய் மறுகணமே மறைந்தது. தொடர்ந்து, 'முள் வேலியே... காணாமல் போவாயாக...' என்றார் முனிவர். அதுவும் மறைந்து விட்டது. கண்களை மூடி, வியப்பான செயல்களை செய்த முனிவரை ஆர்வத்துடன் பார்த்தது முயல் குட்டி. பின் மனம் திருந்தி, 'தவ வலிமை உடையவரை மிக சாதாரணமாக நினைத்து விட்டோமே' என வருந்தி மன்னிப்பு கேட்டு, பாதம் தொட்டு வணங்கியது. ஆசியும், நல்ல புத்தியும் பெற்று ஒழுக்கமாக புறப்பட்டது முயல் குட்டி.பட்டூஸ்... யாரையும் தவறாக மதிப்பிட்டு கிண்டல் செய்யவே கூடாது. - எஸ்.டேனியல் ஜூலியட்