உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (250)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 15; தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். ஒருநாள், வகுப்பாசிரியை வராத போது பெஞ்சுக்கு பெஞ்சு தாவி குதித்துக் கொண்டிருந்தேன். திடீரென வகுப்புக்குள் பிரவேசித்த ஆசிரியை, இதை பார்த்து விட்டார். கோபத்தில், 'கழைக்கூத்தாடி மாதிரி ஆட்டம் போட்டுட்டு இருக்கிறாயே...' என திட்டினார். அவர் சொன்ன, 'கழைக்கூத்தாடி' என்ற சொல்லுக்கு பொருள் தெரியவில்லை. இந்த வார்த்தையை, கேள்விப்பட்டதில்லை. கழைக்கூத்தாடி என்பது, வசவு வார்த்தையா... அது பற்றி தகுந்த விளக்கம் கூறி, தெளிவுபடுத்துங்கள் ஆன்டி...இப்படிக்கு,மு.வெள்ளிங்கிரி.அன்பு மகனே...கழைக்கூத்து என்பதை ஆங்கிலத்தில் 'அக்ரோபாட்டிக்ஸ்' என்று குறிப்பிடுவர். இது ஒரு வகை வித்தை. மூங்கில் கம்புகளுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து, சாகசம் செய்யும் கூத்து கலை. இந்த சொல்லில் முதலில் உள்ள, 'கழை' என்றால், மூங்கில் என அர்த்தம். கயிற்றில் நடக்கும் வித்தையை செய்வது, பெரும்பாலும் பெண்களே... கழைக்கூத்தை, 'ஆரியக்கூத்து' எனவும் அழைப்பர்.இது, 'ஆர் எக்கூத்து ஆடினாலும், காரியத்தில் கண் வை' என்பது மருவி, 'ஆரியக்கூத்து' என ஆயிற்று என்றும் கூறுவர்.கழைக்கூத்தாடி கலைஞர்களின் பூர்வீகம் குஜராத். தோம்பரா பழங்குடி மக்களின் பாரம்பரியக் கலையாக இது உள்ளது. தோம்பரா மக்களை, தமிழகத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவு எனவும் கூறுவர்.இவர்களின் தாய்மொழி தெலுங்கு. பிழைப்பு தேடி ஆந்திரா வழி, தமிழகம் புகுந்தவர்கள். இதனால், ரெட்டி, டொம்பரர் என்றும் அழைப்பர்.தமிழகத்தில், கழைக்கூத்தாடும் குடும்பத்தை சேர்ந்த, 10 ஆயிரம் பேர் இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், பெரம்பலுார், அரியலுார், உளுந்துார்பேட்டை, மதுராந்தகம், விழுப்புரம், காரைக்கால், சிவகங்கை, விராலிமலை, கோவில்பட்டி, சிங்கம்புணரி, மானாமதுரை, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட, 40 ஊர்களில் வசிக்கின்றனர்.கழைக்கூத்தாடி கலைஞர்கள், நாடோடிகள்; ஆனால், ஆண்டுக்கு இருமுறை சொந்த ஊர் வருகின்றனர். அதவாது, ஆடிபெருக்கு, போகி பண்டிகை அன்றும் வருவதாக கூறப்படுகிறது. இவர்களின், குலதெய்வம் கம்பத்தடி மாரியம்மன். திருவிழாக்களில், ஆண்களுக்கு தகுந்த பெண் பார்ப்பர். திருவிழாவுக்கு வராதவர்களுக்கு, 15 நாள் சம்பாத்தியம் அபராதம் என்ற நடைமுறை சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது.குழந்தை, பிறந்த இரண்டாவது மாதத்திலேயே கூத்து பயிற்சி தருவர். தலையே நிமிராத இரண்டு மாத குழந்தையை ஒரு கையால் துாக்கி, மேலே நிறுத்துவது முதல் பயிற்சி.குழந்தையை தரையில் கிடத்தி, வயிற்றில் ஏறி மிதிப்பது, வயிற்றில், கயிற்றை கட்டி ஊஞ்சல் போல ஆட்டுவது என பயிற்சிகள் தொடரும். கூத்தின் துவக்கத்தில், சில வித்தைகள் செய்வர். தரையில் கிடக்கும் ஊசிகளை கண்களால் எடுப்பது, கண்களை கட்டிக் கொண்டு பெண் மீது கத்தி வீசுவது, கர்ணம் அடிப்பது என, பலவகையாக அவை அமையும். கூட்டம் சேர்க்க, தவில், தட்டு, சிறு ஊதுகுழல் இசைக்கருவிகள் பயன்படுத்துவர்.மொத்தத்தில், கழைக்கூத்தாடி கலைஞர்கள் உயிரை பணயம் வைத்து, வெகுஜன கேளிக்கையூட்டும் அசுர வித்தைக்காரர்கள். உன்னை அந்த ஆசிரியை திட்டவில்லை. பாராட்டி தான் உள்ளார். சந்தோஷப்படுவாயாக!- -அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !