உள்ளூர் செய்திகள்

உழைப்பே புதையல்!

ஆற்றோரம், 10 ஏக்கர் விளைநிலம் வைத்திருந்தான் கந்தன். விவசாயத்தில் போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. வறுமை வாட்டியது. அவன் மனைவி வண்ணக்கிளிக்கு, காதில், கழுத்தில் அணிந்து கொள்ள ஆபரணங்கள் எதுவுமில்லை. மகன், மகளிடம் அலைபேசி கருவி வாங்கும் ஆசையிருந்தது. எதையும் நிறைவேற்ற இயலவில்லை.குடும்பத்துக்கு குளிர்சாதன பெட்டி, 'டிவி' இருசக்கர வாகனம், மனைவிக்கு நகைகள் எல்லாம் வாங்கும் ஆசை இருந்தது. ஆனால், வருமானம் போதவில்லை. கால் வயிறு, அரை வயிறு சாப்பிடத் தான் போதுமாயிருந்தது.ஏக்கத்தோடு இறைவனிடம் அழுது முறையிட்டான் கந்தன். பின், உறங்கினான். அவன் கனவில் தோன்றிய இறைவன், 'உன் துயரங்கள் மறையப் போகின்றன. நான் சொன்னபடி செய்; உன் வயலில் பள்ளம் தோண்டு; புதையலை காட்டுகிறேன்...' என்றார். தோண்ட வேண்டிய பகுதியையும் அழகாக விளக்கினார்.பள்ளம் தோண்டி பயன் இல்லை; புதையல் எதுவும் கிடைக்கவில்லை.மறுநாள் இரவு கனவில் வந்த இறைவனிடம், 'நேற்றைய கனவில் புதையல் என்றாய். தோண்டியதில், ஒன்றும் கிடைக்கவில்லை; ஏமாந்தது மட்டுமே நிஜம்...' என கோபத்துடன் கூறினான் கந்தன்.தெய்வீக சிரிப்பை உதிர்த்தார் இறைவன்.'நீ மெதுவாக தோண்டியதால் புதையல் நகர்ந்து விட்டது. மேலும், மூன்றடி அகலப்படுத்து...' என்றார். அதன்படி செய்தான். புதையல் எதுவும் கிடைக்கவில்லை.அடுத்தநாள் கனவில், இறைவன் தோன்றினார். கந்தனின் கோபம் தலைக்கு ஏறியது.'என்னை போன்ற ஏழைகளுடன் விளையாடுகிறாயே... நீயெல்லாம் இறைவனா...'சற்றும் அசராத இறைவன் தீர்க்கமாய் 'நீ தோண்டிய இடத்தில் நெல் விதைகளை போடு. நிச்சயம் புதையல் கிடைக்கும்...' என்றார். இறைவன் கூறியபடி விதைகளை போட்டான். ஆற்றோரமாய் அமைந்திருந்ததால், நல்ல மகசூல் கிடைத்தது.அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்றான். கிடைத்த பணத்தில் திட்டமிட்டான். 10 ஏக்கர் நிலத்திலும் ஆட்களை அமர்த்தி வேலை பார்த்தான். கடின உழைப்பால் செல்வம் குவிந்தது. மனச்சோர்வு காணாமல் போனது.குழந்தைகள் கேட்டதையும், மனைவிக்கு நகைகளையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் வாங்கினான். உழைப்பு தான் மிகப்பெரிய புதையல் என்பதை அறிந்தான் கந்தன்.குழந்தைகளே... உழைப்பு எப்போதும் நல்ல பலன் தரும்.- க.முனிராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !