உள்ளூர் செய்திகள்

புளி தண்ணீரும்; நீராகாரமும்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம், வைர விழா உயர்நிலை பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தேன்.வகுப்பறையிலும், பாடம் கற்பிப்பதிலும் கண்டிப்பானவர்; அன்பானவர்; பள்ளியில் அனைவராலும் மதிக்கப்பட்டவர் என் வகுப்பு ஆசிரியர் ரங்கசாமி. கையில், நான்கு அடி நீளமுள்ள பிரம்பு வைத்திருப்பார்; ஆனால், யாரையும் அடித்ததில்லை.எல்லா வகுப்புகளுக்கும், பீஸ் கட்டாதவர்கள் பட்டியல் வரும். ஆனால், எங்கள் வகுப்பாசிரியர் வகுப்புக்கு மட்டும் வராது.காரணம், எங்கள் வகுப்பாசிரியர், பள்ளி அலுவலகம் சென்று, 'பீஸ்' கட்டாதவர்கள் பட்டியலை பெற்று, அந்த தொகையை அவரே கட்டி விடுவார்.பள்ளி ஆண்டு விழாவில், 'எமதர்பார்' நாடகத்தில், எமனாக நடித்தேன். அன்று முதல் அனைவரும் என்னை, 'எமா' என்று தான் அழைத்தனர்.மதிய உணவாக, புளி தண்ணீர் - நீராகாரம் தான் பள்ளிக்கு எடுத்து செல்வேன். ஒருநாள், அதுவும் இல்லாமல் சென்றேன்.மதிய உணவு நேரம் முதல், மீண்டும் பள்ளி துவங்கும் நேரம் வரை, மாணவ, மாணவியரை கண்காணித்து கொண்டிருப்பார் வகுப்பாசிரியர்.மதிய உணவு கொண்டு வராததை அறிந்து, 'எமா... சாப்பிட்டாயா' என்று கேட்டார். 'இல்லை' என்றேன். அவர் கண்கள் கலங்கின. அவர் கொண்டு வந்த சாப்பாட்டை எனக்கு பகிர்ந்து கொடுத்து, 'சாப்பிடு' என்றார்.வகுப்பிற்குள் வந்தவுடன், மாணவ, மாணவியரை பார்த்து, 'யாராவது சாப்பாடு கொண்டு வராமல் இருந்தால், என்னுடன் வந்து சாப்பிடுங்கள். சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடலாம்!' என்பார். அவரும் கண்கலங்கினார்; மாணவ மாணவியரும் கண் கலங்கினர்.அந்த அன்னமிட்ட கை இன்றும் என் மனதில், நீங்கா நினைவாக இருக்கிறது.- தே.தர்மராஜ், திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !