உள்ளூர் செய்திகள்

நன்மை கடைபிடி!

தஞ்சாவூர் மாவட்டம், சாத்தனுார் கிராம பள்ளியில், 1944ல், 4ம் வகுப்பு படித்த போது, ஆசிரியராக இருந்தார் கோபாலசார். பாடத்துடன், நீதிபோதனை கருத்துகளையும் புகட்டுவார்.அன்று, 'உயிரினங்களை துன்புறுத்தக் கூடாது; அன்பு பாராட்ட வேண்டும்...' என எடுத்துரைத்தார்.வகுப்பு முடிந்து வீடு திரும்பினேன். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார் என் தாத்தா; அவருக்கு சிகிச்சை அளிக்க வந்திருந்தார் வைத்தியர். கூண்டில், இரண்டு அழகான புறாக்கள் அடைக்கப்பட்டிருந்தன.அம்மாவிடம் அதுபற்றி கேட்ட போது, 'புறா ரத்தத்தில் மருந்தை கலந்து, தாத்தா உடலில் பற்றுப்போட போகிறார் வைத்தியர்; அதற்காக அதிகாலையில் அவற்றை கொல்வார்...' என விபரம் கூறினார். அதை எண்ணி வருந்தியபடி துாங்க போனேன்.நள்ளிரவில் திடீரென்று சத்தம் கேட்டது. தாத்தா அறையில் அழுது கொண்டிருந்த அம்மாவிடம், 'என்ன ஆச்சு...' என கேட்டேன். கண்ணீருடன், 'தாத்தா மூச்சு நின்று விட்டது...' என்றார்.அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். ஏதோ நினைவுடன் காலை வீட்டின் பின்புறம் கட்டியிருந்த புறாக்கூண்டு அருகே சென்றேன். மெதுவாக கூண்டை இழுத்து திறந்தேன், சிறகடித்து பறந்தன புறாக்கள்.எனக்கு, 86 வயதாகிறது; இன்றும் அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை; நல்ல போதனைகளை கற்று தந்த அந்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.- ராதை அம்மா, சென்னை.தொடர்புக்கு: 93602 39313


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !