உள்ளூர் செய்திகள்

முட்டாள் மனைவி!

முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் வடுக்கப்பன் என்பவன் இருந்தான். அவன் மகா கருமி. அவனுக்கு வாய்த்திருந்த மனைவி வேம்பாயியோ அவனுக்கு நேர் எதிர். தாராளமாகச் செலவு செய்வதோடு, ஏமாளியாகவும் இருந்தாள்.தன்னைப்போலவே, தன் மனைவியையும் கருமியாக மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தான் வடுகப்பன். ஆனால் மனைவியைத் திருத்த முடியவில்லை.அவளது ஏமாளித்தனத்தை நன்கு புரிந்த ஏமாற்றுக்காரன் ஒருவன், வடுக்கப்பன் இல்லாத நேரம் பார்த்து சாமியார் வேடத்தில், அவன் வீட்டிற்கு சென்றான்.சாமியார் வேடத்தில் இருந்த அவனைக் கண்டதும், அவனை வரவேற்று நன்கு உபசரித்தாள் வேம்பாயி.''அம்மணி, நான் நேற்று மேல் உலகம் சென்றிருந்தேன். அங்கே உன் தாயும், தந்தையும் போட்டுக் கொள்ள நகையும், உடுத்த உடையும் இல்லாமல் துன்பப்படுகின்றனர். என்னைப் பார்த்து அழுத அவர்கள் இருவரும், 'எங்கள் நிலைமையை மகளிடம் சொல்லுங்கள். அவள் நிறைய உடைகளும், நகைகளும் தருவாள் அவற்றை வாங்கி வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி வைத்தனர்,'' என்று கூறினான்.போலி சாமியார் சொன்னதை உண்மை என்று நம்பினாள் வேம்பாயி.''என்னைப் பெற்ற தாயும், தந்தையும் இப்படியா துன்பப்படுகின்றனர். இந்த மூட்டைக்குள் நகைகளும், உடைகளும் வைத்திருக்கிறேன். நேராகச் சென்று அவர்களிடம் கொடுங்கள். என்ன சொல்கின்றனர் என்று கேட்டுவிட்டு வாருங்கள்,'' என்று சொல்லி மூட்டையை அவனிடம் தந்தாள்.''அப்படியே செய்கிறேன் அம்மணி!'' என்று சொல்லிவிட்டு, மூட்டையுடன் அங்கிருந்து சென்றான் போலி சாமியார்.சிறிது நேரத்தில் அவன் கணவன் வீட்டிற்குள் நுழைந்தான். அவன் மனைவி உள்ளே அழுவதைப் பார்த்து திகைத்தான்.''ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டான்.''சிறிது நேரத்திற்கு முன் நீங்கள் வந்திருக்க கூடாதா? மேல் உலகத்திலிருந்து ஒரு சாமியார் நம் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் முகத்தில் அருள் வீசியது. என் தாயும், தந்தையும் அங்கே உடுத்த உடையும் போட்டுக்கொள்ள நகையும் இல்லாமல் துன்பப்படுகின்றனர் என்றார். நான் தான் நம் வீட்டிலிருந்த உடைகளையும், நகைகளையும் அவரிடம் தந்து என் பெற்றோரிடம் சேர்க்கச் சொன்னேன்,'' என்றாள்.தன் மனைவியை எவனோ ஒருவன் நன்றாக ஏமாற்றி இருக்கிறான் என்பது கருமிக்குப் புரிந்தது.''அந்த சாமியார் எந்தப் பக்கமாக சென்றார் தெரியுமா?'' என்று கேட்டான் வடுகப்பன்.''அதிகமாகப் போனால் இரண்டு கல்தூரம் கூடப் போயிருக்க மாட்டார்,'' என்றாள் மனைவி.மனைவி பறிகொடுத்த பொருளை எல்லாம் எப்படியும் அவனிடமிருந்து திரும்பப் பெறவேண்டும் என்று குதிரையில் ஏறி வேகமாகச் சென்றான் கருமி.குதிரை தொலைவில் வரும்போதே, தன்னிடம் உள்ள பொருளைக் கைப்பற்ற, அவள் கணவன் வருகிறான் என்று புரிந்து கொண்டான் சாமியார் வேடத்தில் இருந்தவன். அடர்ந்திருந்த மரத்தின் மேலேறிக் கிளைகளில் நன்றாக பதுங்கிக் கொண்டான்.கருமிக்கு சாமியார் மரத்தில் பதுங்கி இருப்பது தெரிந்தது. குதிரையை மரத்தில் கட்டிவிட்டுச் சாமியார் இருந்த மரத்தின் மேல் ஏறினான். தன் அருகே வரும்வரை காத்திருந்த சாமியார், மரத்தின் கிளையிலிருந்து தரையில் குதித்தான். கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து மூட்டையுடன் அதில் ஏறிப் பறந்தான். மரத்தை விட்டுக் கீழே இறங்கிய கருமி, இனி அவனை, என்ன முயற்சி செய்தாலும் பிடிக்க முடியாது என்று உணர்ந்தான்.அவன் மிகுந்த களைப்புடன் வீடு திரும்பினான். அவனைக் கண்ட மனைவி, ''என்னங்க! போகும்போது குதிரையில் போனீர்கள். இப்போது நடந்து வருகிறீர்கள் என்ன நடந்தது,'' என்று கேட்டாள்.தானும் அந்தச் சாமியாரிடம் ஏமாந்ததைச் சொல்ல விரும்பாத கருமி, ''நடந்து சென்றால் உன் பெற்றோரிடம் உடைகளையும், நகைகளையும் கொடுக்க பல நாட்களாகும் என்பதால் என் குதிரையை அவனிடம் தந்து வேகமாகச் செல்லுமாறு சொல்லிவிட்டு வந்தேன்,'' என்றான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !