உள்ளூர் செய்திகள்

சுந்திர சந்தோஷங்கள்! (கட்டுரை)

ஆகஸ்ட் 15 நாம் சுதந்திரம் பெற்ற அற்புத நாள். 62,63 என ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற 1947-க்கு பின் கடந்து விட்டன. சுதந்திர நாட்டில் வாழ்கிறோம் என்பதே மிக மிக சந்தோஷமான விஷயம்தானே. ஆனால், அதை மட்டுமே நாம் சந்தோஷமாக இன்றும் சொல்லி கொண்டு இருக்க முடியுமா? கொண்டாட வேறு வேறு காரணங்களும் நமக்கு இருக்க வேண்டாமா?

கட்டாயமாக இலவச கல்வி!நாடு முழுவதும் 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கும், 'கல்வி உரிமைச் சட்டம்' இந்த ஆண்டு அமலுக்கு வந்தது. எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக்க கடந்த 2002-ம் ஆண்டில் 86வது அரசியல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 6 முதல் 14 வயதுவரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய, இலவச கல்வி அளிக்க வகை செய்யும், 'கல்வி உரிமை மசோதா' சட்டசபையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றதை தொடர்ந்து சட்டமாகி அமலுக்கு வந்தது.

படிக்காத குழந்தைகளே இல்லை!இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் இனி படிக்காத குழந்தைகளே இல்லை என்ற நிலை ஏற்படும். பள்ளிகளுக்கே செல்லாத அல்லது படிப்பை பாதியில் விட்ட 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் எங்கு இருந்தாலும் கண்டு பிடிக்கப்படுவர். அவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து அருகில் உள்ள பள்ளிகளில் அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கப்படுவர். அந்த பள்ளியின் நிர்வாகிகள், பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடுவர். இந்த குழந்தைகளை சேர்த்து கொள்ள முடியாது என்று எந்த பள்ளியும் சொல்ல முடியாது. இந்த திட்டத்துக்கான செலவில் 55 சதவீதத்தை மத்திய அரசும் 45 சதவீதத்தை மாநில அரசுகளும் ஏற்கும்.

தரமான கல்வி!குழந்தைகள் எந்த இனமாக இருந்தாலும், எத்தகைய சமூக அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த நிதி ஒரு தடையாக இருக்காது.ஒவ்வொரு இந்திய குழந்தையும், அது பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் கல்வி அறிவு பெற வேண்டும். தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற கனவும், அது நனவாக வேண்டும் என்ற விருப்பமும் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருக்க வேண்டும்.

90 ஆண்டுகளுக்குப் பின்-நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய பேரவையில் பேசிய கோபால கிருஷ்ண கோகலே, இந்திய மக்களுக்கு கல்வி உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு அதை செய்து காட்டியுள்ளது. 63 ஆண்டுகளுக்கு பிறகு செய்து காட்டியுள்ளது என்பதுதான் சரி.1947-ம் ஆண்டு வரை ஆங்கிலேயே ஆட்சிதான் இருந்தது. இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கல்வி சேர்க்கப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் நிறைந்த நாடு. நமது குழந்தைகளுக்கு சரியான கல்வி அளித்தால் எதிர்கால இந்தியா பாதுகாப்பானதாகவும் வளமானதாகவும் இருக்கும்.

ஒத்துழைப்பு அவசியம்!இந்த சட்டத்தை அமல்படுத்திட மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், மாவட்ட கலெக்டர்கள், கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஆசிரியர்களும் தீவிர பங்காற்ற வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்தும்போது பெண் குழந்தைகள், தலித்துகள், ஆதிவாசிகள், நலிந்த பிரிவினர், சிறுபான்மையினர் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும். எல்லா இந்தியரும் படித்தவராய் இருக்க ஒவ்வொரு இந்தியரும் முயல வேண்டும்.

பள்ளிக்கு செல்ல வேண்டும்!நாட்டில் இப்போது 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 22 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 92 லட்சம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்வது இல்லை. இந்த திட்டத்தால் இவர்கள் பயன் அடைவர். இந்த திட்டத்துக்காக நாட்டில் உள்ள எல்லா தனியார் பள்ளிகளும், நலிவடைந்த மாணவர்களுக்காக 25 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும்.

ஒரு கி.மீ., சுற்று வட்டாரத்தில்...மாநில அரசுகள் ஒவ்வொரு 3 கி.மீ., தூரத்துக்கு இடையே பள்ளிகள் இருப்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை சிறப்பாக அமல்படுத்துவதற்கு வசதியாக, ஒரு கி.மீ., சுற்று வட்டாரத்துக்குள் ஓர் ஆரம்ப பள்ளி அமைக்க வேண்டும். எந்த பள்ளியும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு இடம் இல்லை என்று நிராகரிக்க கூடாது. அந்த பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 3 ஆண்டுகளில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டு மைதானம், உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவற்றை ஏற்படுத்த மாநில அரசு உதவி செய்ய வேண்டும்.

பெரிய நாடு!பெரிய நாடு என்றால் எல்லாமே பெரிதாகத் தான் நடக்கும். கட்டாய கல்வி திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. வறுமை, தூரம், வேலை, ஊனம், சூழல் போன்ற எந்த காரணத்தாலும் குழந்தைகள் படிக்க முடியாமல் போய் விட கூடாது என்ற உன்னதமான நோக்கம் கொண்ட சட்டம் இது.குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையாக கல்வியை காணிக்கையாக்கிய நாடுகள் மிகவும் குறைவு. குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையாக கல்வியை, சுதந்திரம் அடைந்த பத்திருபது ஆண்டுகளுக்குள் செய்திருந்தால் இந்தியா என்றோ உச்சத்தை அடைந்திருக்கும். ஆனால், அதற்கான நிதி அப்போது இல்லை. பட்டினி சாவுகளை தடுக்க வேண்டிய பரிதாப நிலையில் நம் நாடு தவித்து கொண்டிருந்த நேரம் அது. இன்று எத்தனை ஆயிரம் கோடிகள் இந்த திட்டத்துக்கு செலவானாலும் கவலையில்லை என்று அரசு அறிவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம்.நாடு முழுவதும் 92 லட்சம் சிறுவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும், பள்ளிக்கே செல்லதாவர்கள். இவர்களில் குழந்தை தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களை எல்லாம் பள்ளிக்கு வரவழைப்பது மிக பெரிய சவாலாகும்.3 கி.மீ., தூரத்திற்குள் பள்ளி அமைப்பதும் அப்படிப்பட்ட சவாலான விஷயம்தான். 30 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்றால் நாடு முழுவதும் 5 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவது மிக பெரிய சவால்தான். வெல்லப்படுவதற்குதான் சவால்கள். வெல்வோம்!

என்ன பண்ணிவிடும் கட்டாய கல்வி?கட்டாய இலவச கல்வி திட்டம் அதிசயங்களை நிகழ்த்திவிடும். சுதந்திரத்தின் முழு அர்த்தத்தை, மதிப்பை அடைய கல்விதான் வழி. இள வயதில் கல்வி கற்காதவர்கள் தவறான பாதைக்கு போக வாய்ப்புண்டு. அறிவு பெற்ற இளைய சமுதாயத்தால்தான் ஒரு நாடு பெருமையுற முடியும்.சுதந்திரம் பெற்றதற்கு முழு அர்த்தமாக விளங்குவது அனைவருக்கும் கல்வி என்பதுதான். உலக நாடுகளோடு போட்டிபோட நம் நாடு உன்னத இடத்தில் உட்கார, அனைவரும் கல்வி பெறுவது மிக முக்கியம். இந்த ஆண்டு சுதந்திர தினம், 'அனைவருக்கும் கல்வி!' என்ற மாபெரும் சந்தோஷத்தை அளித்துள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !