மனதில் விழுந்த தழும்பு!
தேனி மாவட்டம், அல்லிநகரம், அரசு பள்ளியில், 1967ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக சாலமன் இருந்தார். நன்றாக பாடம் சொல்லி தருவார். எல்லா பாடங்களிலும், முதல் மதிப்பெண் பெற்று வந்தேன். என் வகுப்பு தோழி ஆண்டாள், அரையாண்டு தேர்வில், முதல் மதிப்பெண் பெற்றதால், என் மனம் வாடியது.ஒரு நாள், விளையாட்டு பயிற்சியின் போது, எதிர்பாராத விதமாக அவளைத் தள்ளி விட்டேன்; முட்புதருக்குள் விழுந்தாள். இடது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.மறுநாள், 'எப்படி காயம் ஏற்பட்டது...' என, கேட்டார் ஆசிரியர். தவறி விழுந்ததாக சொல்லி சமாளித்தாள். என் தவறை எண்ணி, மிகவும் வேதனையடைந்தேன். பள்ளி படிப்பு முடிந்து, ஆண்டுகள் பல கடந்தன. ஒருமுறை, அல்லிநகரம் சென்ற போது, அழைப்பு குரல் கேட்டு திரும்பினேன். ஒரு பெண் நின்றாள். அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சிரித்த படியே, 'என்னை தெரியவில்லையா...' என்றபடி, உள்ளங்கையை காட்டினாள் ஆண்டாள். திகைத்து போனேன்; அந்த தழும்பு அழியாமல் இருந்தது. பின், நலம் விசாரித்து மகிழ்ந்தோம். தற்போது என் வயது, 65. பள்ளியில் நடந்த அந்த நிகழ்வு, என் மனதில், வடுவாக பதிந்து உள்ளது.- ஆர்.தர்மராஜ், தேனி.தொடர்புக்கு: 82201 25831