அறிவின் பலம்!
ஆசிய நாடான சீனாவில், ஐம்பெரும் மன்னர்களில் ஒருவர், யாவோ; நல்லாட்சியை நடத்தியவர். பேரரசர், கூ என்பவரின் மகன். இவரது இன்னொரு பெயர் தாவோ தாங்ஷி. நாட்டின் தலைமைப் பொறுப்பை, 20 வயதில் ஏற்று, 119 வயது வரை சிறப்பாக ஆட்சி செய்தார் என, சீன இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது. சீன நாட்டின் பரந்த பகுதிகளை ஒன்றிணைத்து, ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டியவர். மக்கள் தொண்டாற்றியவர். அவரது, ஒன்பது மகன்களும் சுகபோகங்களில் மூழ்கிக் கிடந்தனர். ஆட்சி பொறுப்பேற்க அவர்களுக்கு தகுதி இல்லை என உணர்ந்தார். வாரிசு அரசியல் வேண்டாம் என்று, முடிவெடுத்தார். தனக்குப் பின், ஆட்சிக்கு வரத் தகுதியானவரை தேடினார். அப்போது, ஷன் என்பவனைப் பற்றி அறிந்தார். பாராட்டும் வண்ணம், அவன் பணிகளும், பண்பும் இருந்தன.அவன் நடவடிக்கைகளை கண்காணித்தார். சோதனையான கட்டங்களை கடக்க பயன்படுத்திய அறிவு நுட்பத்தை ஆராய்ந்து தெளிந்தார். முதலில், மாவட்ட அளவிலான ஆட்சி நிர்வாகத்தை, ஷானிடம் ஒப்படைத்தார். எளிமையுடன் வாழ்ந்து, உயர்ந்த எண்ணத்துடன் நிர்வகித்தான். அவன் நடவடிக்கையில் நம்பிக்கை ஏற்பட்டது. பின், இரண்டு மகள்களை மணம் முடித்து கொடுத்தார். வாழ்வதற்காக, ஒரு சாதாரண வீட்டையும், சிறிது பணத்தையும் கொடுத்தார் யாவோ.அரண்மனையில் வாழ்ந்த இளவரசியர், எளிய குடிலுக்கு வந்தனர். மாவட்டத்துக்கு ஆட்சியர் என்ற போதிலும், சொந்த உழைப்பில் பெற்ற ஊதியத்தில் வாழ்க்கை நடத்தினான், ஷன். மக்களோடு மக்களாக, அன்றாடம் வேலை செய்து திருப்தியுற்றனர் அவனது மனைவியர். மாவட்ட அதிகாரியாக, ஷன் பொறுப்பேற்றதும், அவனது மாற்றாந்தாய் குடும்பத்தினர் தொல்லை கொடுத்தனர். சமயோசிதமாகவும், அறிவுபூர்வமாகவும் அவற்றை முறியடித்தான்; அவர்களை மன்னித்து உழைப்பில் ஈடுபடுத்தினான்.உதவாக்கரையாக இருந்த யாவோவின் மகன்களை திருத்தும் முயற்சியில் வெற்றி பெற்றான் ஷான். இதை அறிந்த மகிழ்ந்த யாவோ, ஆட்சியில் அமர முழு தகுதி பெற்றவன் என, முடிவு செய்தார். பொறுப்பை ஒப்படைத்தார்.பட்டூஸ்... நம் நாட்டிற்கும், இது போன்ற தலைவர்கள் தான் தேவை! அந்த பொறுப்புக்கான தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நிர்வாகத்தை கற்று தெளிந்து மக்களுக்கு நன்மை செய்யுங்கள்.