உள்ளூர் செய்திகள்

புத்திசாலி ஜாக்!

வயல் வெளியில் நிலா வெளிச்சம் ஜொலித்தது. நிலவில் குளிர் காய்ந்திட நண்டுகள் எல்லாம் வயல் வரப்பை விட்டு வெளியே வந்தன.''ஆஹா! நிலவொளியில் குளிர் காய்வது சூப்பரா இருக்கு... இப்படியே நாம் விடிய, விடிய இருந்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது'' என நண்டுகள் எல்லாம் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன.உடனே அந்தப் பக்கமாக பூனை ஒன்று, 'மியாவ்... மியாவ்...' என்று கத்திக் கொண்டே வந்தது.பூனையின் சப்தத்தைக் கேட்டதும் நண்டுகள் எல்லாம் வளையினுள் ஒளிந்துக் கொண்டன.''ஆஹா! நிலா வெளிச்சம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கு! இந்த இடத்தில் நம்மைத் தவிர வேறு எவருமே இல்லை போன்று தெரிகிறது. வயல் வரப்புகளில் தவளைகளோ, இல்லை நண்டுகளோ ஏதாவது என் எதிரே தென்பட்டால் நான் அவைகளைப் பிடித்து சாப்பிடுவேன். ஆனால், இப்போது எதுவுமே என் எதிரே தென்படவில்லையே! நான் என்ன செய்வது?'' என்று கவலையுடன் கூறிய படியே சென்றது.அந்த நேரத்தில் பூனையின் எதிரே ஓர் பாம்பு வந்தது.''பூனையாரே! ஏதோ புலம்பியபடி தனியாக வருகிறீரே! உமது வருகையானது எனக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது,'' என்றது பாம்பு.''பாம்பே! இந்த இடத்தில் உன்னை சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது நான் உன்னை சந்திப்பதால் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்,'' என்றது பூனை.''பூனையே! இந்த நேரத்தில் இந்த இடத்தில் உனக்கும், எனக்கும் ஏதாவது இரை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இங்கே நம் இருவருக்கும் இரை கிடைப்பதற்கான எந்தவிதமான சூழ்நிலையும் இல்லை. எனவே நீ என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது.''பாம்பே! நீ என்ன செய்யப் போகிறாய்? அதனை முதலில் சொல்!'' என்று கேட்டது பூனை.''பூனையே! நான் இந்த இடத்தை விட்டுச் செல்லாமல் சிறிது நேரம் காத்திருந்து... எனக்கு ஏதாவது இரை கிடைக்குமானால், அதனைப் பிடித்துச் செல்வேன்,'' என்றது பாம்பு.''பாம்பே நீ காத்திருக்கும் போது, நானும் உன்னோடு காத்திருக்கலாமே! நாம் இருவரும் காத்துக் கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லையென நினைக்கிறேன்,'' என்றது பூனை.''சரியாகச் சொன்னாய் பூனையே! இந்த நேரத்தில் உனக்கு நான் துணை! எனக்கு நீ துணை! நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வரப் போரத்தில் நண்டுகள் ஏதாவது வந்தால் பிடித்து தின்னலாம்,'' என்றது.அதன் பின்னர் பாம்பும், பூனையும் அதே இடத்திலேயே காத்துக் கொண்டிருந்தன.வளைக்குள் இருந்து இதைக் கவனித்த நண்டுகளோ எரிச்சலடைந்தது.''ஐயோ! இதென்ன கொடுமை! நாம் எதிர் பார்க்காதபடி இந்த பூனையும், பாம்பும் இந்த இடத்தில் வந்துள்ளனவே! நாம் இவைகளை இந்த இடத்தை விட்டு எப்படியாவது விரட்டிட வேண்டும். அப்போதுதான் நாம் எல்லாரும் நமது கூட்டத்தினருடன் இந்த இடத்தில் குளிர் காய முடியும்,'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டன.அந்த நண்டுகளின் கூட்டத்தில் 'ஜாக்' என்ற நண்டு இருந்தது. அது தன்னுடைய நண்பர்களின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியென்று ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருந்தது. அது சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது.சிறிது நேரத்திற்குப் பின்னர் ஜாக்கின் மனதில் ஓர் யோசனை தோன்றியது.ஜாக் இருந்த வளையானது குறுஞ்செடிகளும், புற்களும் மறைத்துக் காணப்பட்டதால் அந்த வளையின் வெளியே மெல்ல தனது கொடுக்கை நீட்டி ஒரு குச்சியை எடுத்து சற்று மேலே தூக்கியவாறு அப்படியும், இப்படியும் ஆட்டியது.நண்டோ, தவளையோ வெளியே வருகிறதா என்ற கவனமுடன் பார்த்துக் கொண்டிருந்த பூனையானது அப்படியும், இப்படியுமாக ஆடுகின்ற கம்பைக் கண்டு திடுக்கிட்டது.உடனே அது அருகில் அமர்ந்திருந்த பாம்பை நோக்கியது.''பாம்பே! பாம்பே! நமக்கு ஓர் அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருக்கின்றது. அதோ அந்த இடத்தில் அப்படியும், இப்படியுமாக கம்பு ஒன்று ஆடிக் கொண்டிருக்கின்றதே! அதனைப் பார்த்தாயா?'' என்று நடுக்கத்துடன் கேட்டது பூனை.பூனையின் நடுக்கத்தைப் பார்த்ததும் பாம்பிற்கும் நடுக்கம் வந்தது.உடனே, அது ஆடிக் கொண்டிருக்கும் கம்பை நோக்கியது.அதற்கு அக்காட்சியைப் பார்த்ததும் மேலும் நடுக்கம் ஏற்பட்டது.''பூனையே! இன்று பவுர்ணமியல்லவா! ஒருவேளை இந்த இடத்தில் பேய்களின் தொல்லை அதிகமாகயிருக்கும் போல் தோன்றுகிறது. வரப்போரத்தில் கிடக்கும் கம்பானது தானாக ஆடுகிறது என்றால் அதனை நாம் பேயின் வேலை என்றுதான் நம்பவேண்டும்,'' என்றது பாம்பு.''ஆமாம் பாம்பே! நீ சொல்வது உண்மை தான். நான் இந்த வயல் பக்கம் வந்த போது இந்த இடமே அமைதியாகத் தானிருந்தது. எனவே, இந்த இடத்தில் நிச்சயமாகப் பேய்களின் நடமாட்டம் இருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது. எனவே, நாம் உடனடியாக இந்த இடத்தினை விட்டுச் சென்றிட வேண்டும்! இனிமேல் பகல் நேரத்தில் கூட நாம் இந்தப் பக்கமாக வரக்கூடாது!'' என்றது பூனை.அதனைத் தொடர்ந்து பூனையும், பாம்பும் அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓட்டமெடுத்தன.அவை இரண்டும் அந்த இடத்தை விட்டு ஓடிய பின்னர், வளைக்குள் இருந்த நண்டுகள் எல்லாம் மெல்ல வெளியே வந்தன.எல்லா நண்டுகளும் வெளியே வருவதைக் கண்டதும் ஜாக் நண்டு, உற்சாகத்துடன் வெளியே வந்தது.நண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபடி ஜாக்கை பாராட்டின.''நண்பனே! உன்னுடைய சாகசச் செயலினால் நம் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்த பூனையையும், பாம்பையும் விரட்டி விட்டாய்! இனிமேல் அவை பகல் நேரத்தில் கூட இந்தப்பக்கம் வரமாட்டோம் என்று உறுதியளித்தபடி ஓடிவிட்டன. உனக்கு எங்கள் எல்லாருடையப் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றன நண்டுகள்.''நண்பர்களே! பகைவர்களை கண்டு பயப்படாமல், அவர்களை புத்திசாலித்தனமாக விரட்ட வேண்டும்!'' என்று அறிவுரை கூறியது ஜாக்.அனைத்து நண்டுகளும், ஜாக்கின் அறிவுரைக் கேட்டுக்கொண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !