உள்ளூர் செய்திகள்

ஆசிரியரின் யுக்தி!

ராமுவும், வேலனும் ஒரே வகுப்பு மாணவர்கள்; நெருங்கிய நண்பர்கள்; படிப்பில் முதல் இடம் பெற்று வந்தனர்; இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன.இவர்கள் ஒற்றுமையாக இருப்பது, அதே வகுப்பில் சோமுவுக்கு பிடிக்கவில்லை. ஏதாவது வம்பிழுத்து, நட்பைப் பிரித்துவிட திட்டம் தீட்டினான். அன்றைய வகுப்பில், இனிக்கும் செய்தி சொல்வதாக கூறியிருந்தார் ஆசிரியர். ஆவலுடன் காத்திருந்தனர் மாணவர்கள். பாடவேளை முடிந்ததும், ''வெள்ளிக்கிழமை சாத்தனுார் அணைக்கட்டுக்குச் சுற்றுலா போகிறோம். அதற்கான செலவை ஈடுசெய்ய ஒவ்வொருவரும், 20 ரூபாய் எடுத்து வர வேண்டும்...'' என்றார் ஆசிரியர்.மகிழ்ந்து, ஆரவாரமாக குரல் எழுப்பினர் மாணவர்கள்.மறுநாள் - சுற்றுலா செலவுக்கு, 20 ரூபாய் எடுத்து வந்திருந்தனர்.பணத்தை வாங்கி, பெயரை பதிவு செய்யும் பொறுப்பை வேலனிடம் ஒப்படைத்தார் ஆசிரியர். பணம் செலுத்திய மாணவர்கள் பெயரை பட்டியலாக தயாரிக்க சொன்னார். அத்துடன் ராமுவிடம், பணத்தை கணக்கிட்டு மொத்தமாக ஒப்படைக்க சொன்னார். இந்த பணியில் இருவரும் மும்முரமாக இருந்தனர். அப்போது, தீய எண்ணத்துடன் இருவரையும் பிரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான் சோமு.சுற்றுலா செலவுக்காக புத்தக பையில் வேலன் வைத்திருந்த, 20 ரூபாயை எடுத்து சலனமின்றி தன் பையில் வைத்துக்கொண்டான் சோமு.அனைவரிடமும் பணம் வாங்கிய பின், தன் பங்கை எடுக்க பையை திறந்தான் வேலன்; காலியாக இருந்தது. வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. இது குறித்து ஆசிரியரிடம் புகார் தெரிவித்தான். கூர்ந்து கவனித்தபடி, 'அருகிலிருக்கும் ராமு தான் பணத்தை எடுத்ததாக ஆசிரியரிடம் புகார் கூறுவான்; அதன்மூலம் நட்பு பிரிந்து விடும்' என எதிர்பார்த்திருந்தான் சோமு.ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ''தலைமை ஆசிரியரிடம் பெயர் பட்டியலைக் கொடுத்து வருகிறேன்; பின், இதுகுறித்து விசாரிக்கிறேன்...'' என்றபடி புறப்பட்டார் ஆசிரியர்.பணியை முடித்து மீண்டும் வகுப்புக்கு திரும்பியதும், ''வேலன் பையிலிருந்த பணத்தைக் காணவில்லை; மாலை பள்ளி விட்டு செல்லும் போது, அனைவருக்கும் தனித்தனியே ஒரு சீட்டுத் தருகிறேன். அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திரமாக வையுங்கள்; அதில், 'நல்லவன்' என்று எழுதப்பட்டிருக்கும்... ஆனால் நீங்கள் பிரித்து பார்க்க கூடாது...''பணத்தை திருடியவர் சீட்டில் மட்டும் சிறு வித்தியாசம் இருக்கும்; அதை வைத்து, திருடிய மாணவரை கண்டுபிடித்து விடலாம். சீட்டுகளை, நாளை வகுப்பறையில் நான் தான் திறப்பேன்; அதுவரை யாரும் திறந்து பார்க்க கூடாது...'' என எச்சரித்து புறப்பட்டார்.வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பினர்.இரவு 8:00 மணி -ஆசிரியர் வீட்டிற்கு அவசரமாக வந்தான் சோமு.அன்புடன் வரவேற்றவரிடம், ''ஐயா... என் சீட்டில் நீங்க எதுவுமே எழுதலையே...'' என்றான். ''அடடா... மறந்து போயிருப்பேன்...'' என்றபடி, சீட்டை வாங்கி ஏதோ எழுதி மடித்து தந்தார். சந்தோஷமாக புறப்பட்டான் சோமு. மறுநாள் -வகுப்புக்கு வந்த ஆசிரியர், ''சீட்டை திறக்காமல், உங்கள் பெயர் எழுதி கொடுங்கள்...'' என்றார். அனைவரும் அதன்படி கொடுத்தனர். அவற்றை தொகுத்து சோமுவிடம் கொடுத்த ஆசிரியர், ''எல்லா சீட்டிலும் நான் எழுதியதை சோதனை செய். ஏதாவது வித்தியாசமாக இருந்தால் கண்டுபிடி...'' என்றார்.மாணவர்கள் கொடுத்த சீட்டுகளை சரி பார்த்தான் சோமு. ஒன்றை தவிர, எந்த சீட்டிலும் எதுவும் எழுதியிருக்கவில்லை.கடைசியாக, அந்த சீட்டை எடுத்தான் சோமு; அதில் எழுதியிருந்ததை வாசிக்கும்படி கூறினார் ஆசிரியர்.தயங்கியபடியே வாசித்தான்.அதில், 'மாணவ மணிகளே... யாரும் சீட்டைத் திறந்து பார்க்கக் கூடாது என்று சொல்லியிருந்தேன்; அதை கடைபிடித்து யாருமே சீட்டைத் திறந்துப் பார்க்கவில்லை... ஆனால் சோமு மட்டும் விலக்காக இருக்கிறான்... இதிலிருந்து என்ன தெரிகிறது... வேலனின் பணத்தை எடுத்தது யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை...' என, எழுதியிருந்தது. தலையைக் குனிந்தான் சோமு. பையிலிருந்து, 20 ரூபாயை ஆசிரியரிடம் ஒப்படைத்து மன்னிப்பு கோரினான்.ஆசிரியரின் யுக்தியை பாராட்டினர் மாணவர்கள்.தங்கங்களே... பிறருக்கு தீங்கு செய்ய எண்ணினால், அவமானப்பட வேண்டியது தான்.பொன்மலை பாபு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !