குத்தியதால் வந்த புத்தி!
ராமேஸ்வரம், ஸ்ரீபர்வதவர்த்தினி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு ஆசிரியையாக, 1964ல் பணி செய்தேன். அப்போது, எனக்கு, 24 வயது.ஒரு நாள், ஓய்வு அறையில், திடீர் என ஏற்பட்ட வாக்குவாதத்தில், பட்டதாரி ஆசிரியை சரோஜினி, 'நீயெல்லாம், 11ம் வகுப்பு முடித்து, ஆசிரியர் பயிற்சி எடுத்தவ தானே... உனக்கு என்ன தெரியும்...' என்று குத்திக் காட்டினார். மிகவும் அவமானமாக உணர்ந்தேன்; எப்படியாவது, பட்டதாரியாக தீர்மானித்தேன். திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்தன. கணவருக்கு ஒடிசா மாநிலத்தில் வேலை. அவருடன் சென்று, ஒரு பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தேன்.பின், 1976ல், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதுாரக் கல்வி மையத்தில், இளங்கலை படிக்க ஆரம்பித்தேன். ஆண்டு தோறும், சென்னை வந்து தேர்வு எழுதினேன். 10 ஆண்டுகளில், முதுகலை ஆசிரியர் பயிற்சி வரை முடித்தேன். பெங்களூரு, செயின்ட் ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இப்போது என் வயது, 80; அந்த ஆசிரியை குத்தி காட்டியதால் தான், வைராக்கியத்துடன் படித்து முன்னேற முடிந்தது. அவருக்கு, மனப்பூர்வமாக நன்றியை சமர்ப்பிக்கிறேன்.- மரகதம் ராகவசிம்ஹன், சென்னை.தொடர்புக்கு: 83741 11933