திக்... திக்... பங்களா! (05)
சென்றவாரம்: விடுமுறைக்கு, பழைய குற்றாலம் தாத்தா வீட்டுக்கு, இரட்டையர் மதுவும், வினுவும் சென்றனர். அவர்கள் பயணித்த குதிரை வண்டி கவிழ்ந்தது. இனி -குதிரை வண்டியிலிருந்து துாக்கியெறியப்பட்ட மதுவும், வினுவும் தரையில் உருண்டு, சேற்றில் விழுந்தனர். சுதாரித்து எழுந்தபடி வண்டிக்காரன் சுப்பையனை அழைத்தனர்.பதில் இல்லை.'எங்கே போயிட்டான்' என எண்ணி, மீண்டும் கூவினர்.சரசரப்பு கேட்டது; சிரமப்பட்டு எழும் சத்தம்.'நா இங்க தான் இருக்கேன்; கொஞ்சம் பொறுங்க; இதோ வந்திடுறேன்...'இருட்டு இப்போது பழகிப் போனது.உடைந்து கிடந்த லாந்தர் விளக்கை, பழுது பார்த்தான் சுப்பையன். மதுவை எதுவோ கிச்சு கிச்சு காட்டியது.'சும்மாயிரு வினு...' அதட்டினாள்.'நான் என்ன செஞ்சேன்...'கிச்சு கிச்சு மூட்டுவதாக குற்றம் சாட்டினாள்.'ஐயோ... உன்னை தொடவேயில்லையே...'எதுவோ சீறியது. அரையிருட்டிலும் கண்டுபிடித்து விட்டான். அலறினாள் மது. மலைப்பாம்பு ஒன்று அவளை படர ஆரம்பித்தது. லாந்தருடன் ஓடி வந்தான் சுப்பையன். பாம்பு விலகி ஓடியது. 'வண்டி அவ்வளவு தானா... நாம நடந்தே போக வேண்டியது தானா...''ஒரு, 10 நிமிஷம் பொறுங்க; சரி செய்திடுறேன்...'குடை சாய்ந்திருந்த வண்டியை நிமிர்த்தினான் சுப்பையன். கடையாணிக்குப் பதில் ஒரு கம்பியை முறுக்கி கட்டினான். குதிரையை இழுத்து வந்தான். அறுந்திருந்த சேணத்தை அகற்றி, மாற்று சேணம் பொருத்தி, 'ஏறுங்க போலாம்...' என்றான்.மீண்டும் ஓட ஆரம்பித்தது குதிரை.'கடையாணி எப்படி கழண்டிருக்கும்...''தெரியலயே... நானும், 50 வருஷமா இதே பாதையில குதிரை வண்டிய ஓட்டி வந்துட்டு இருக்கேன். இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்ததே இல்ல... நல்லவேளை உங்களுக்கு ஒண்ணும் ஆகல... ஏதாவது ஆகியிருந்தா... ஜமீன்தாரு என்னை நார்நாரா கிழிச்சு எறிஞ்சுருவாரு...''ஏன் இந்த பக்கமெல்லாம் தெரு விளக்கு இல்ல...''ஜமீன் எல்லைக்குள் மின்விளக்கு போடக்கூடாதுன்னு ஜமீன் உத்தரவு...''ஐயோ... அப்படின்னா கொள்ளு தாத்தா பங்களால மின்சாரம் இருக்காதா...''பங்களாவுக்குள்ள மட்டும் இருக்கு...'சிறு சாரலுடன் காற்று வீசியது.மலையடிவாரத்தில் அமைந்திருந்தது பங்களா. வெளிப்பூச்சு இன்றி, புகை படிந்திருந்தது சுவர். பார்க்கும்போதே ஏதோ அமானுஷ்யம் கூட்டியது. பின்னணியில் திகில் சங்கீதம் எழுந்தது. கண் முன் வவ்வால்கள் பறந்து மறைந்தன.பங்களாவைச் சுற்றி வயல்கள்; பாசனக் கிணறு. நீர் இறைக்க மாட்டுத்தடம். பங்களா வளாகத்தில் நுழைந்தனர். ஒரு வைக்கோல் மனிதன் வரவேற்றான். வைக்கோலை, சட்டை, பேன்ட்டில் திணித்து, தலையாக பானை பொருத்தி உயரமான கம்பில் நிறுத்தியிருந்தனர்.குதிரை வண்டி, போர்டிகோவில் நின்றது; மதுவும், வினுவும் குதித்து இறங்கினர். முகத்தை தாக்கியது மூலிகைக் காற்று. வரவேற்பறை முழுக்க பாடம் செய்யப்பட்ட மிருகங்கள். புலி, காட்டெருமை மற்றும் மிருக தலைகள்... சுவற்றில், பாதுகாப்பு பூச்சுடன் யானைத் தந்தங்கள்.'ஐயா...' பெருங்குரல் எழுப்பினான் சுப்பையன்.மாடிக்கு இரட்டைப் படிக்கட்டுகள் உயர்ந்திருந்தன. மாடியின் ஒரு அறையிலிருந்து, இசக்கியப்பனும், இன்னொரு அறையிலிருந்து, பார்வதியும் வெளிப்பட்டனர்.வாக்கிங் ஸ்டிக் ஊன்றி இறங்கி வந்தார் இசக்கியப்பன். அலங்காரமாய் தலைப்பாகை. ஆறேகால் அடி உயரமிருந்தார். கொள்ளுப்பாட்டி ஐந்தடி உயரம். நரைத்த தலையில் சிறு கொண்டை போட்டிருந்தார். கழுத்தில் இரட்டைவட சங்கிலி பளபளத்தது. கைகளில் வளையல்கள். 16 முழச் சேலை; முக்கால் கை ஜாக்கெட்; தோளில் சால்வை.தாத்தா, பாட்டியை ஓடிப்போய் கட்டிக்கொண்டனர். அப்பா கொடுத்து விட்ட பரிசுப் பொதிகளை கொடுத்தனர்.'ரெண்டு பேருமே தகப்பன் ஜாடை தான்; சின்ன வயசில உங்கப்பன் உங்களை மாதிரி இருப்பான்; கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு பறப்பான்...'அப்பாவைப் பற்றிய செய்தி கேட்க ஆனந்தமாய் இருந்தது.'தாத்தா... இந்த பங்களாவை வெளியிலருந்து பார்க்க, ரொம்ப வித்தியாசமா தெரியுதே ஏன்...''வெளியிலிருந்து பாக்கத்தான் சாயம் போன சேலை மாதிரி தெரியும். உள்ளுக்குள் பளபளப்பும், மெருகும் அப்படியே இருக்கு. 'பங்களாவின் தரைத் தளத்தில், 33 அறைகள்; முதற்தளத்தில், 33 அறைகள்; இரண்டாவது தளத்தில், 33 அறைகள்; மொத்தம், 100 வாசல்கள்; பாதாள அறைகளும் உண்டு என்பர்; ஆனால், எனக்கு தெரியாது...''பங்களாவைச் சுத்தியிருக்கிற எல்லாமும் நம்ம இடமா தாத்தா...''ஆமா... 400 ஏக்கர் இடம்; நெல், சோளம் பயிரிடுறோம்; தோப்புகளில் தென்ன மரங்களும், தேக்கு மரங்களும், பச்சை பாக்கு, வாழை தோப்புகளும் உண்டு. 20 ஏக்கர்ல அபூர்வ மூலிகைகள் விளைவிக்கிறோம்...' என்று முடித்தார். அடுத்து, 'ஏன் இவ்வளவு தாமதம்...' என்றார் பாட்டி.வெடி குண்டு காரணத்தையும், வழியில் குதிரை வண்டி குடை சாய்ந்ததையும், கூறினான் வினு. தாத்தாவின் கண்கள் சிவந்தன. சுப்பையனை ஓங்கி அறைந்தார். விழுந்து எழுந்தவன் கன்னதைப் பொத்தியபடி, 'மன்னிச்சிருங்கய்யா...' என்றான்.'வண்டி கவிழ்ந்தப்ப குதிரை என்னடா செய்துச்சு...''காட்டுக்குள் ஓடிப்போயிருச்சு...'துள்ளலாய் ஓடிய தாத்தா, குதிரையின் முகப்பகுதியில் ஒரு குத்து விட்டார். அது நிலைகுலைந்து பின்னங்காலில் சரிந்து விழுந்தது. கைத்தடி ஊன்றும், 98 வயது கிழவர் அடிக்கும் அடியா இது...'கோபப்படாம மன்னிச்சுருங்க...' என்றனர் குழந்தைகள். சுவர்களில், தாத்தாவின் முன்னோர் ஆளுயரப் படங்களாய் சிரித்தனர்.'இவ்வளவு பெரிய பங்களால, நீங்க ரெண்டுபேரும் மட்டுமா... தனிமையா இல்ல தாத்தா...''இல்ல... எங்களுக்கு தனிமை தான் பிடிக்கும்; தவிர எங்களுக்கு துணையாக ஒருத்தி இருக்கிறாள்...''யார் அவள்...''கூப்பிடுறேன்... செண்பக குழல்வாய்மொழி...'சமையலறையிலிருந்து ஒரு இளம்பெண் வெளிப்பட்டாள். 'இவள் தான் எங்கள் சமையல்காரி; பெயரை சுருக்கி, 'செண்பா' என கூப்பிடுவோம்; இவள் சமையல் நளபாகம்...' சிரித்தபடி வணங்கினர் மதுவும், வினுவும். பதிலுக்கு வணங்கியவளின் கண்கள், இமைக்கவேயில்லை.'ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க. இரவு உணவு உண்ணலாம்...' என்றார் தாத்தா.'சரி...''உங்களுக்கு முதல் மாடியில் அறை...''ஏன் தாத்தா...''காரணம் வேணாமே... போங்க... போய் குளிச்சுட்டு வாங்க...'அறைகளின் உள்ளமைப்பு, மகாராணிகளின் சயன அறைகளை ஒத்திருந்தன. குளித்து திரும்பினர். எதுவும் பேசாமல், சிரிக்காமல் இயந்திர கதியாய் உணவு பரிமாறினாள் செண்பா.தாத்தாவின் வலது கை மோதிர விரலை பார்த்து விட்டான் வினு. கறுப்பு மோதிரம்; அதில் வட்டமாய் கறுப்பு முத்து. அந்த முத்தில் ஏதோ தெரிந்தது; கூர்ந்து நோக்கினான்; அந்த முத்துக்குள் அழும் மனிதமுகம் ஒன்று தெரிந்தது; பயந்து வியர்த்தான் வினு.- தொடரும்...