உள்ளூர் செய்திகள்

மூன்றாம் ஜாதி

என் வயது, 64; நான், ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, எங்கள் பள்ளி, இலக்கிய மன்ற ஆண்டு விழாவிற்கு, குன்றக்குடி அடிகளார் சிறப்பு சொற்பொழிவாளராக வந்தார்.மேடையில் அமர்ந்திருந்த அவர், 'ஜாதி இரண்டொழிய... என்ற செய்யுள் யாருக்கு தெரியும்...' என, மாணவர்களிடம் கேட்டார். ஒரு மாணவன், கையை உயர்த்தினான். அவனை மேடைக்கு அழைத்து, செய்யுளைப் பாடச் சொன்னார். அவன், பிழையின்றி, திருத்தமாக பாடினான்.அவனை பாராட்டிய அடிகளார், 'நீ எந்த ஜாதி...' என கேட்டார். அவன், தான் சார்ந்த ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டான். 'இப்போது தான், இரண்டு ஜாதி என, குறிப்பிட்டாய்; ஆனால், மூன்றாவதாக, ஒரு பெயரை சொல்கிறாயே...' என்றார். அனைவரும், சத்தமாக சிரித்தனர்.அடிகளாருக்கு அருகில், மேடையில் அமர்ந்திருந்த ஆசிரியர், 'ஐயா... நீங்க என்னை கேட்டிருந்தாலும், என் ஜாதிப் பெயரைத்தான் கூறியிருப்பேன்...' என்றார். மீண்டும் கூட்டத்தில் சிரிப்பலை மோதியது. இது நடந்து, 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த நிகழ்வு மனதில் மறையாமல் உள்ளது.- ஆர்.தியாகராஜன், திருக்கோவிலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !