உள்ளூர் செய்திகள்

கல்வி தாகம்!

காஞ்சிபுரம், அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்தேன். என் வகுப்பு மாணவன் மகேஷ், அரைமணிநேரம் தாமதமாக பள்ளிக்கு வந்தான். அப்போது, பாடம் எடுத்து கொண்டிருந்தவர், தமிழ் ஆசிரியர் சிவஞானம் ஐயா; பிறம்படி மன்னர்.'ஏன் தாமதம்...' என, கேட்டார்.அவன் கூறிய காரணத்தை ஏற்காமல், கையை நீட்ட சொல்லி, நான்கு பிறம்படி கொடுத்து, வகுப்பில் அமர சொன்னார்.அடுத்த நாளும் தாமதமாக வந்தான்; வகுப்பில், அதே சிவஞானம் ஐயா. வழக்கம் போல், பிறம்படி கொடுத்து, அமரச் சொன்னார்; இப்படியே அவன் தாமதமாக வருவதும், அவனை அடிப்பதுமாக, ஒன்றரை மாதம் சென்றது.ஒரு நாள், சிவஞானம் ஐயா, அவர் வீட்டின் அருகில் உள்ள வீதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, கேரியரில் செய்திதாள்களுடன், மிதிவண்டியின் உயரம் எட்டாமல், அரை பெடல் அடித்து ஓட்டி வந்தான் மகேஷ்.அவன், செய்தித்தாள்களை, அங்குள்ள வீடுகளுக்கு போட்டு விட்டு புறப்பட்டான். சிவஞானம் ஐயா, அவனை பார்த்து விட்டார். ஐயா கண்களில் நீர், மனதில், 'இவனையா தினமும் அடிக்கிறோம்' என்று வருத்தம். அடுத்தநாள் பள்ளி துவங்கியது வழக்கம் போல், தாமதமாக வந்த மகேஷ் எப்படியும் நம்மை அடிப்பார் என, கையை நீட்டினான். ஆனால், அவரோ அவனை அடிக்காமல், கட்டி அணைத்து, வகுப்பில் அமரச் சொன்னார்.யாருக்கும் ஒன்றும் புரியவில்லை; மகேஷ் திகைப்புடன் இருக்கையில் அமர்ந்தான்.மகேஷின் கல்வி செலவை, சிவஞானம் ஐயா ஏற்றுக் கொண்டார்; அவனும், 12ம் வகுப்பில், 1034 மதிப்பெண் பெற்றான்.தற்போது என் வயது, 24. இப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்கள் இன்றும் உள்ளனர்!- விக்கி, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !