உள்ளூர் செய்திகள்

தொட்டா அலடா மாரா!

பெங்களூரில் 'சிக்கஹள்ளி' என்ற இடத்தில் மிகப் பெரிய ஆலமரம் உள்ளது. இதேபோல் 'ரமோஹள்ளி' பகுதியிலும் இதை விட பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது.ராமோஹள்ளி ஆலமரத்தை விட சிக்கஹள்ளி ஆலமரத்தின் சிறப்பு என்னவென்றால், சிக்கஹள்ளி ஆலமரம் மேலே குடை விரித்தது போல் அழகாக படர்ந்திருக்கும்.இந்த மரத்தை குறைந்தது 400 வருடங்களாக பரம்பரை, பரம்பரையாக ஒரு குடும்பம் பராமரித்து வருகிறது. காரணம், அந்த குடும்பம் அம்மரத்தை தெய்வீக மரமாக நினைக்கின்றனர்.இன்று பெங்களூரு, ஹெங்கிரி வரை நீண்டு விட்டது. அக்கம் பக்கங்களில் ஏராளமான வீடுகள் வர ஆரம்பித்து விட்டன. இந்த மரம் சார்ந்த பகுதியை விற்கச் சொல்லியும் ஏகப்பட்ட நெருக்கடிகள் வருகின்றன. ஆனால், இந்த குடும்பம் அசையவில்லை. இந்த ஆலமரத்தை விற்கவும், விரும்பவில்லை. ஒரு ஏக்கர் 4 குண்டாஸ் அளவில் அமைந்துள்ளது இந்த ஆலமரம். சாலையை ஒட்டி இருப்பதால் கூடுதல் டிமாண்ட் வேறு.இந்த மரத்தின் அடியில் தினமும் விளக்கேற்றி வைத்து மரமே வணங்கப்படுகிறது. கிராம மக்களும் இதனை தெய்வமாக துதிப்பதால், மறந்தும் இதற்கு இடையூறு செய்வதில்லை.90 வயதிலும் இதன் உரிமையாளர் தினமும் ஆலமர தரிசனத்தை விடவில்லை. மேலும், பார்வையிடுவதற்கு அதன் அருகில் நெருங்குபவர்களையும் செருப்பு அணியவிடுவதில்லை.இது ஒரு 'பிக்னிக் ஸ்பாட்!' அது மட்டுமல்ல. வெளிநாட்டுக்காரர்கள், சினிமாக்காரர்கள் இங்கு படமெடுக்க வருகின்றனர். யோகா மற்றும் தியானத்தில் ஈடுபடுபவர்களும் இங்கு வந்து அமைதியான சூழலை தருவதால், அவற்றில் ஈடுபட தயங்குவதில்லை.பெங்களூரிலிருந்து 28வது கிலோ மீட்டரில் உள்ள இதற்கு மார்க்கெட்டிலிருந்து மர இருப்பிடத்திற்கே நேரடி பஸ் வசதி உள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் ஆலமரத்தை பார்க்கவும், ரசித்துச் செல்லவும் பெரும் கூட்டம் வருகிறது.- ராஜி ராதா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !