உள்ளூர் செய்திகள்

வெளிப்படை!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர், சம்பத்கிரி ஆரம்ப பள்ளியில், 1964ல், 4ம் வகுப்பில் படித்தேன். படிப்பில் முதலிடம் பெற்று வந்ததால் ஆசிரியர்களுக்கு செல்லமாக இருந்தேன். ஒருநாள், தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றேன். அங்கு யாரும் இல்லை. அந்த அறையில் நிறைய புத்தகங்கள் இருந்தன. ஆர்வ மிகுதியால், ஒன்றை புரட்டினேன். அப்போது, உடன்படிக்கும் சுப்ரமணியன் வந்தான். மிகவும் உயரமாக இருப்பான்; பெரும் பலசாலி. நான் திருட்டுத்தனமாக புத்தகம் எடுத்ததாக கூறி அச்சுறுத்தினான். என்னை காட்டிக்கொடுக்காமல் இருக்க, 'சொல்வது போல் செய்ய வேண்டும்...' என்று மிரட்டினான்.ஒன்றும் புரியாமல் நடுங்கியபடி நின்றேன். மிரட்டலுக்கு பணிந்தேன். குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டில் காசு எடுத்து கொடுத்து வந்தேன். சிலநேரம் மிட்டாய் கேட்பான்; மறுக்காமல் வாங்கி கொடுப்பேன். அப்போது, தீபாவளி பண்டிகை வந்தது. பொம்மை துப்பாக்கி கேட்டு மிரட்டினான். வீட்டில் தொடர்ந்து திருட பயமாக இருந்தது. அவனை தவிர்க்க வழி தெரியவில்லை. நன்றாக யோசித்து வகுப்பு நண்பன் ரங்கசாமியின் உதவி கேட்டேன். பலசாலியான அவன் அண்ணனை அழைத்து வந்து, 'இனி, இதுபோல் மிரட்டினால் வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்...' என எச்சரித்து அடக்கினான். தொல்லை தீர்ந்து நிம்மதி அடைந்தேன். முதலிலே விபரத்தை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்திருந்ததால் அப்போதே பிரச்னை தீர்ந்திருக்கும். பயந்து நடுங்கியதால் தவறுக்கு மேல் தவறு செய்யும் நிலை ஏற்பட்டது. அதை எண்ணி வருந்தினேன்.எனக்கு, 67 வயதாகிறது. வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டேன். குடும்பத்திலும், அலுவலக விவகாரங்களிலும் இயன்ற அளவு உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மையை கடைபிடித்தால் அமைதியாக வாழ முடிகிறது.- வி.ராமசுப்ரமணியன், செகந்திராபாத்.தொடர்புக்கு: 92471 56123


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !