உள்ளூர் செய்திகள்

இரு துருவங்கள்!

வெகு காலத்துக்கு முன், ஒரு சிறிய நாட்டை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவர் பெயர் அச்சலேந்திரா.அச்சலேந்திரா ஏழைகளிடத்தில் இரக்க குணம் கொண்டவர். தன்னால் ஆன எல்லா உதவிகளை ஏழைகளுக்கு செய்து வந்தார். அதே போல் பிறரை ஏமாற்றி பொருளை அபகரிப்பவர்களையும் வெறுத்தார்.அச்சலேந்திரா அடிக்கடி மாறுவேடத்தில் தன் நாட்டைச் சுற்றிப் பார்க்க புறப்பட்டு விடுவார். அவர் அப்படி செல்லும் போது தன்னுடன் யாரையும் அழைத்துச் செல்ல மாட்டார். தனியாக செல்லும் அரசர், தன் நாட்டில் வறுமையில் வாடும் யாரையாவது கண்டால், அவர்களை மறுநாள் தன் அரசவைக்கு அழைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்கள் சுகமாக வாழ வழி செய்து வந்தார்.ஒருநாள் அச்சலேந்திரா மாறுவேடத்தில் தான் நாட்டை சுற்றிப் பார்க்க புறப்பட்டார். அவருக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைத்தன.ஒரு ஊரில் இரண்டு பேர் வீதியில் கண்டெடுத்த பணமுடிப்புக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மாறுவேடத்தில் அங்கு வந்த அரசனைப் பார்த்த இரண்டு பேரும் வந்தவர் அரசன் என்று தெரியாமல் அவரிடம் நியாயம் கேட்டனர். பணமுடிப்புக்கு உண்மையான சொந்தக்காரன் ஒரு விவசாயி. அவன் தன் மகளின் திருமணத்திற்காக தன் வயலில் விளைந்த நெல்லை சந்தையில் விற்றுவிட்டு கிடைத்த பணத்தை, ஒரு சிறிய துணிப்பையில் போட்டு அதை ஒரு பண முடிப்பு போல் எடுத்து வரும் போது, தவறுதலாக வீதியில் தவறவிட்டு விட்டான். சிறிது தூரம் சென்ற விவசாயி பண முடிப்பு காணமல் போனதை அறிந்து, திரும்பி வந்து பார்த்தபோது மிக அருகில் ஒருவன் பணமுடிப்பை கையில் வைத்திருப்பதைப் பார்த்தான். உடனே விவசாயி பணமுடிப்பு என்னுடையது என்று, பண முடிப்பை வைத்திருப்பவனிடம் கூறினான்.பணமுடிப்பை வைத்திருந்தவன் பண முடிப்பு தன்னுடையதுதான் என்று சற்று உரத்த குரலில் கூறினான்.பணமுடிப்புக்கு உண்மையான சொந்தக்காரனான விவசாயிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான். அந்த நேரத்தில் தான் மாறு வேடத்தில் இருந்த அரசர் அச்சலேந்திரா அங்கு வந்தார்.''விவசாயி மாறுவேடத்தில் இருந்த அரசரிடம், ஐயா! உங்களைப் பார்த்தால் ஒரு பெரிய இடத்து மனிதர் போல் தோன்றுகிறது. நீங்கள் தான் என்னுடைய பணமுடிப்பை வாங்கித் தர வேண்டும்,'' என்று கூறினான்.அரசர் அச்சலேந்திரா பணமுடிப்பு வைத்திருந்தவனைப் பார்த்து சற்று பணிவாக, ''ஐயா! உங்கள் கையில் உள்ள பணமுடிப்பு இதோ என் அருகில் நிற்பவருடையது என்று கூறுகிறார், இந்த பணமுடிப்பு உங்களுடையது என்று நிரூபிக்க உங்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா?'' என்று கேட்டார்.பணமுடிப்பை கையில் வைத்திருந்தவன், தன்னை கேட்டவர் மாறு வேடத்தில் இருக்கும் அரசர் என்று தெரியாமல், ''ஐயா! உங்களைப் பார்த்தால் பெரிய இடத்து மனிதர் போலவும், நன்கு படித்தவர் போலவும் தெரிகிறது. பண முடிப்பு என் கையில் இருக்கும் போது, அது என்னுடையது என்பதற்கு, இதைத் தவிர என்ன ஆதாரம் வேண்டும்,'' என்று சற்று ஏளனமாக அரசனைப் பார்த்துக் கூறினான்.அச்சலேந்திரா தன் எதிரில் இருக்கும் இரண்டு பேரையும் பார்த்து, ''ஒரு பணமுடிப்புக்கு, இரண்டு பேர் சொந்தம் கொண்டாடுகிறீர்கள், அதனால் பணமுடிப்புக்கு உண்மையான சொந்தக்காரன் யார் என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்பது எனக்குத் தெரியும்,'' என்றார் அரசர்.அச்சலேந்திராவுடன் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்த போது அவர்களை சுற்றி கூட்டம் கூடி விட்டது.அச்சலேந்திரா பணமுடிப்பு வைத்திருந்தவனைப் பார்த்து, ''பண முடிப்பில் எவ்வளவு பணம் உள்ளது?'' என்று கேட்டான்.பணமுடிப்பு வைத்திருந்தவன் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தபடி, ''பணமுடிப்பில் என்ன இருக்கும்... பணம்தான் இருக்கும்!'' என்று அலட்சியமாக பதில் சொன்னான்.அரசர் விவசாயியைப் பார்த்து, ''பணமுடிப்பில் எவ்வளவு பணம் உள்ளது?'' என்று கேட்டார். விவசாயி சற்றும் தாமதிக்காமல், ''நூறு வெள்ளி காசுகளும், ஒரு மோதிரமும் உள்ளதாகக் கூறினான்!''மாறுவேடத்தில் இருந்த அரசனும், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து, ''ஐயா! பணமுடிப்பு வைத்திருப்பவரிடம் உள்ள பண முடிப்பை வாங்கி அதில் உள்ள பணத்தை எண்ணிப் பாருங்கள்,'' என்று கூறினான்.அரசன் கூறியதைக் கேட்டவுடன் பண முடிப்பு வைத்திருந்தவன், தான் எப்படியும் மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணத்தில் பண முடிப்பை முதியவரிடம் கொடுத்து விட்டு, கூட்டத்தின் நடுவில் சென்று அங்கிருந்து நகரப் பார்த்தான். அதை கவனித்த அரசன் உடனே, அவனை நகரவிடாமல் பிடித்துக் கொள்ளுமாறு கூட்டத்தினரைப் பார்த்து கூறினார். முதியவர் பணமுடிப்பை பிரித்து அதில் நூறு வெள்ளி காசுகளும், ஒரு மோதிரமும் இருப்பதாகக் கூறினார். அரசன் பணமுடிப்பை முதியவரிடம் இருந்து வாங்கி விவசாயிடம் கொடுத்து, மகள் திருமணத்தை நல்லவிதமாக நடத்தும்படி வாழ்த்தி அனுப்பினான்.கூட்டத்தினர் பிடித்து வைத்திருப்பவனை, அரசன், அந்த ஊர் நீதிபதியிடம் அழைத்துச் சென்றான். அரசன் நீதிபதியிடம், தான் மாறுவேடத்தில் இருக்கும் இந்த நாட்டின் சிற்றரசன் என்று கூறினான். நீதிபதியும் வந்திருப்பது அரசன் அச்சலேந்திரா என்று தெரிந்ததும் வணங்கி நின்றார்.''பிறர் பொருளை அபகரிப்பதும், ஏமாற்றுவதும், திருடுவதும் ஒரே மாதிரியான தீய செயல்கள் தான். என் நாட்டில் இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் இருக்கக் கூடாது. அதனால் நான் அழைத்து வந்த இந்த குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை வழங்கி, இவனுக்கு கிடைக்கும் தண்டனையை பார்க்கும் மக்கள் தவறு செய்ய பயப்பட வேண்டும்,'' என்று கூறினான். பிறகு அவன் தன் அரண்மனைக்குச் சென்றுவிட்டான்.சில நாட்கள் அரசாங்க காரியங்களில் மூழ்கி இருந்த அரசன், தன் நாட்டை சுற்றிப் பார்க்க நேரம் இல்லாமல் அரண்மனையிலேயே இருந்து வந்தான். திடீர் என்று ஒருநாள் அரசன் மாறுவேடம் ஏதும் அணியாமல், தன் குதிரை மீது அமர்ந்து அரச உடையிலேயே நாட்டை சுற்றிப் பார்க்க புறப்பட்டான்.குதிரை மீது அமர்ந்தவாறே பல கிராமங்களை சுற்றிப் பார்த்த அரசன், தன் அரண்மனைக்கு திரும்பும் வழியில், ஒரு ஊருக்கு மத்தியில் இருந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தான். வீதியில் ஒரு முதியவர் குனிந்தவாறே எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.முதியவர் அருகில் சென்ற அரசன், அவரிடம் ''என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டான்.முதியவர் நிமிர்ந்துப் பார்த்து, தன்னை கேட்டவர் அரசன் என்று தெரிந்ததும், இருகரம் கூப்பி அரசனை வணங்கினான். பிறகு அரசனைப் பார்த்து, ''அரசே! இன்று பகல் முழுவதும் உழைத்து சம்பாதித்த ஒரு பணத்தை தவறவிட்டு விட்டேன். அதைத்தான் தேடிக் கெண்டிருக்கிறேன். நான் தவற விட்ட பணம் எனக்கு கிடைக்கவில்லையென்றால், இன்று இரவு நான் பட்டினி கிடக்க வேண்டியதுதான்,'' என்று வருத்தத்துடன் கூறினார்.முதியவர் கூறியதைக் கேட்ட அரசன், ''ஐயா! பெரியவரே நீங்கள் தவற விட்ட ஒரு பணம் போனால் போகிறது, என்னிடம் உள்ள பணமுடிப்பை உங்களுக்குத் தருகிறேன், இதை வைத்து சந்தோஷமாக இருங்கள்,'' என்று கூறினான்.அரசனிடம் இருந்து பணமுடிப்பை வாங்கிய முதியவர் அதை திறந்தார். அதில் நிறைய காசுகள் இருப்பதைப் பார்த்தார். உடனே முதியவர் பண முடிப்பை அரசனிடம் திருப்பி கொடுத்து விட்டு, ''நான் தவறவிட்ட ஒரு பணத்திற்காக இவ்வளவு காசுகள் எனக்கு வேண்டாம்,'' என்று கூறினார்.''ஐயா! இந்த வயதான காலத்தில் ஏன் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் தரும் பணத்தை கொண்டு சுகமாக இருக்கலாமே,'' என்றார் அரசர்.''அரசே! நான் கடினமாக உழைத்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு உண்பதில் தான் திருப்தி அடைகிறேன். நீங்கள் எனக்கு இனாமாக கொடுக்கும் பணமுடிப்பு என்னிடம் இருந்தால் என் நிம்மதியே போய்விடும். பணத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நான் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் சோம்பேறியாக இருந்து விடுவேன். மேலும், நீங்கள் என்னிடம் கொடுக்கும் கொஞ்சம் பணம் இருந்தால், இன்னும் கொஞ்சம் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறரை ஏமாற்றி அவர்களிடம் உள்ள பணத்தை பறிக்க வேண்டும் என்ற குணம் என்னையறியாமலேயே எனக்கு வந்து விடும். மனநிறைவோடு வாழும் என்னை கெட்டவனாக்கி விடாதீர்கள்.''இந்நாட்டு அரசனான நீங்கள் அன்புடன் அளித்த பணமுடிப்பை வாங்க மறுத்த என்னை தயவு செய்து, மன்னித்து விடுங்கள். உண்மையிலேயே நீங்கள் எனக்கு உதவி செய்ய நினைத்தால்... உங்களிடம் உள்ள பணமுடிப்பில் இருந்து ஒரே ஒரு காசை மட்டும் தாருங்கள்,'' என்று கூறினார் முதியவர்.முதியவர் கூறியதைக் கேட்ட அரசன், தன்னிடம் இருந்த பணமுடிப்பில் இருந்து ஒரு காசை முதியவரிடம் கொடுத்தார்.அரசனிடம் இருந்து காசை பெற்றுக் கொண்ட முதியவர், ''அரசே! நீங்கள் நோய், நொடி எதுவும் இல்லாமல் பல்லாண்டு வாழ்ந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று நாட்டு மக்கள் சார்பாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.முதியவரிடம் விடைபெற்ற அரசன் அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தன் நாட்டில் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட மனிதர்கள் வாழ்வதை நினைத்து பெருமை கொண்டான். இவரைப் போன்ற மனிதர்கள் தன் நாட்டில் வாழ்வதால் தான் பருவமழை பெய்கிறது என்று எண்ணி மகிழ்ந்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !