உள்ளூர் செய்திகள்

அறியாமல் செய்த உதவி!

மதுரை மாவட்டம், கரிவலம்வந்த நல்லுார், மகாத்மா காந்தி ஆரம்ப பள்ளியில், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நடந்த சம்பவம் இது! வகுப்பு ஆசிரியர், உயரமாக, வாட்டசாட்டமாக இருப்பார்; அன்பாகவும், பாசமாகவும் பழகுவார். பாடங்களை, நன்றாக சொல்லிக் கொடுப்பார்.ஒரு நாள், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரது கையிலிருந்த புத்தகம், சரிந்து விழுந்தது. அவர் மயக்கம் போட்டு, சேருடன் சாய இருந்தார். இதை கவனித்த நான், அவரை தாங்கி பிடித்து, விழுவதை தடுத்தேன். பின், மாணவர்களுடன் சேர்ந்து, நாற்காலியை தனியாக பிரித்து எடுத்தோம். ஆசிரியரை, நன்றாக படுக்க வைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்து, ஆசுவாசப்படுத்தினோம். அதற்குள் மற்ற ஆசிரியர்கள் ஓடி வந்தனர். மயக்கம் தெளிந்து, கண்களை திறந்த ஆசிரியர். 'என்னை தாங்கி பிடித்து, படுக்க வைத்தது யார்...' என்று கேட்டார்.நான், அமைதியாக இருந்தேன்; வகுப்பு மாணவர்கள், என் பெயரை கூறினர். என்னை அருகில் அழைத்து, மிகவும் பரிவுடன் அரவணைத்து கொண்டார். எனக்கு இப்போது, 64 வயதாகிறது. அந்த நாள், நினைவு நிலைத்து இருக்கிறது. - டி.ரத்தினம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !