உள்ளூர் செய்திகள்

நோய்களை விரட்டு!

ஊரிலிருந்து வந்திருந்தார் தாத்தா. பேரன் கண்ணனை மிகவும் பிடிக்கும்; அவனும் தாத்தாவிடம் ஆசையாக இருப்பான்; அவர் கூறுவதை கருத்துடன் கேட்பான்.கண்ணனை பள்ளியில் சேர்க்க இருந்தாள் அம்மா கனகா. வேண்டிய பொருட்களை வாங்கி பள்ளி கட்டணம் செலுத்த வந்திருந்த தாத்தாவிடம், ''உங்களுடன் சேர்ந்து சாப்பிட போகிறேன்...'' என, அருகில் அமர்ந்தான் கண்ணன்.உணவு பரிமாறினாள் கனகா. காய்கறிகளை தட்டில் ஒதுக்கி, வெறும் குழம்பு, சாதத்தை மட்டும் சாப்பிட்டான் கண்ணன்.பொறுமையாக, ''எதற்காக காய்கறிகளை தள்ளி வைத்து விட்டாய்... அவற்றை சேர்த்து சாப்பிட்டால் தான் ஊட்டசத்து சேரும்... தாத்தாவை போல் உயரமாக... அப்பா மாதிரி, பலசாலியாக வளர வேண்டாமா...'' என்றார் தாத்தா.''காயெல்லாம் எனக்கு பிடிக்காது...'' ''அப்படி சொல்ல கூடாது நீ... சமத்து பையன் தானே... சாப்பிட்டு பழகினால் எதுவும் பிடிக்கும்; சாம்பாரில் கிடக்கும் குடை மிளகாய், பொரியலில் உள்ள புரோகோலியில் வைட்டமின் சத்துகள் நிறைந்து உள்ளன; இதுபோல, முட்டை கோஸ், கீரை, முளைக்கட்டிய பயிறு, பப்பாளி, மாம்பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு பழங்களிலும் நிறைய சத்துகள் உள்ளன...''இந்த சத்துள்ள உணவை சாப்பிட்டால் நீ அழகுடன் இருக்கலாம்; தோல் பளபளவென மின்னும்; கண்கள், 'பளிச்' என தெரியும்; நோய்கள் ஆண்டாது; எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; முக்கியமாக, பக்கத்து வீட்டு அண்ணனுக்கு, சின்ன வயசில் தலைமுடி நரைத்து விட்ட மாதிரி, உனக்கு ஏற்படாது...'' ''அப்படியா... பாவம் பக்கத்து வீட்டு அண்ணனுக்கு நரை வந்ததால், எல்லாரும் கேலி செய்றாங்க. அவரும் காய்கறி சாப்பிட்டால், நரை போயிடும் இல்லையா; நான், இப்பவே அண்ணனிடம் கூறி வரட்டுமா...''''முதலில் நீ சாப்பிடு... அப்புறமா கூறலாம்; நிச்சயம் அண்ணனோட தலைமுடி கருப்பாகி விடும்...''அவ்வளவு தான்... ஒதுக்கியிருந்த காய்களை சாப்பிட்டு தாத்தாவுக்கு முன் எழுந்து, கை கழுவ ஓடினான் கண்ணன். அக்காட்சியை ரசித்து மகிழ்ந்தனர் குடும்பத்தினர்.குழந்தைகளே... எல்லாவித காய்கனிகளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன; அவற்றை சாப்பிட்டால், ஆரோக்கியமாக வாழலாம். - என். கிருஷ்ணமூர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !