வீ டூ லவ் சிறுவர் மலர்!
என் பெயர் ருக்மணி. தற்போது வசிப்பது சென்னை பெசன்ட் நகரில்; வயது 85; எழுத படிக்க சரியாக வராது. ஆனாலும் எழுத்துக்கூட்டி படிக்கும் சிறுவர்மலர் வாசகி நான். இந்தக் காலத்து குழந்தைகள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கின்றனர். எத்தனை வகுப்புகளுக்கு செல்கின்றனர். கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுகின்றனர். ஆனால், நான் அந்தக் காலத்தில் பள்ளிக்கு போகவே ரொம்ப அழுவேன்.அம்மா, 'படி' என்று சொன்னால் அப்பாவிடம் சொல்லி அம்மாவை அடிக்கச் சொல்வேன். அப்பாவும், 'பெண் குழந்தைக்கு படிப்பு எதற்கு?' என சொல்லி நான்காவது வகுப்போடு நிறுத்தி விட்டார்.ஆனால், 'கல்வி கற்காதவன் கண் இருந்தும் குருடன்' என தாமதமாகவே உணர்ந்தேன். கல்வி அறிவு இல்லாமல் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கஷ்டப் பட்டேன். எப்போதும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்தே வாழும் நிலை. படிக்கும் வயதில் படிக்காமல் போனதை நினைத்து இன்றும் வருந்துகிறேன். இந்தக் கடிதம் கூட என் மகள்தான் எழுதினாள். ஆனால், நான் விரும்பும் சிறுவர்மலர் இதழை எழுத்து கூட்டி முழுமையாக படித்து விடுவேன். என் அருமை குழந்தைச் செல்வங்களே... நன்றாக படியுங்கள். அது உங்களை வெற்றிச் சிகரத்திற்கு அழைத்துச் செல்லும். பாட்டிச் சொல்லை தட்டாதீங்க.!