உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர் மலர்

நான் பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். முதன் முதலாய் தினமலர்- - சிறுவர்மலர் இதழை பார்க்கும் சந்தர்ப்பம், கல்லுாரியில் சேர்ந்த காலகட்டத்தில் தான் வாய்த்தது. சிறுவர்மலர் இதழ் தந்த வசீகரம், கல்லுாரி மாணவனாய் இருந்த போதும், அது சுவாரஸ்ய விருந்தை அளிப்பதாகவே இருந்தது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஆர்வத்துடன் வாரி எடுத்து கொள்வேன். அதனுள் இருக்கும் புதிர் போட்டிகளும், சித்திர தொடர் கதைகளும், சாகசக் கதைகளும், அறிவியல் ஆச்சர்யங்களும், விஞ்ஞான தகவல்களும் வரிசையாக வந்து, இதழை கீழே வைக்கவே தோன்றாமல் செய்து விடும்.'கல்லுாரியில் படிக்கும் நீ, இன்னும் சிறுவர்மலர் படிக்கிறியே...' என்று நண்பர்கள் கேலி செய்வர். ஆனால், அதை சிறிதும் பொருட்படுத்தமாட்டேன். சிறுவர்மலர் இதழ் மீதான மோகம் மட்டும் அப்போதும் சரி, இப்போது, சரி கொஞ்சமும் குறையவே இல்லை.ஒரு கட்டத்தில், 'பல முக மன்னன் ஜோ' படக்கதைகளை சேகரித்து, அவற்றை அடுக்கி மொத்தமாக, 'பைண்டு' செய்தேன். கல்லுாரி செமஸ்டர் விடுமுறையில், ஒரு முறை அதைப் புரட்டியபோது மனதிற்கு மிகவும் இதமளித்தது.ஒரே மூச்சில் அதை மீண்டும் படித்து முடித்தேன். வேறு எத்தனையோ சாகச கதைகளை படித்த போது கிடைக்காத திருப்தியை சிறுவர்மலர் இதழின், 'பல முக மன்னன் ஜோ' தொகுப்பு தருவதாக இருந்தது. யாரிடமும் இல்லாத பொக்கிஷமாக வைத்திருந்து, நினைத்த போதெல்லாம் எடுத்து படித்த வண்ணம் இருந்தேன்.பல வீடுகள் மாறி வந்தபோதும் பத்திரமாய் வைத்திருந்தது, பணி நிமித்தமாய் வெளி மாநிலம் சென்றிருந்த போது, கரையானால் சிதைந்துபோனது, மனதிற்கு மிகவும் துக்கத்தை கொடுத்தது.'ஜோ' வின் முகம் சிதைந்து விகாரமாய் மாறிய போதெல்லாம் சந்தோஷப்பட்ட மனம், அந்தத் தொகுப்பு புத்தகம் சிதைந்த போது தாங்கி கொள்ளவே முடியவில்லை.பல வருடங்களாய் சந்தோஷங் களையும், ஆச்சர்யங்களையும் வாரி வழங்கிய சிறுவர்மலர் இதழுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தற்போதைய சிறுவர்மலர் பிரம்மாண்டமாய் அனைவரது இதயத்தையும் கொள்ளை கொள்கிறது!- ஆர்.ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !