ஆட்டிசம் அறிவோம்!
ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிச தினம்!இன்று பரவலாக பேசப்படும் வார்த்தை ஆட்டிசம். அப்படின்னா என்ன, அதன் பாதிப்புகள் என்ன, அவர்களிடம் நாம் நடந்துகொள்ளவேண்டிய விதம் எப்படி என்பது பற்றி பார்ப்போம்.ஆட்டிசம் என்றால் என்ன?இது ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிச நிலையாளர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். மேலும், ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பர். வளர்ச்சிக்குறைபாடு என்றால் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார்களா?இல்லை. நம்மைப்போலவே தான் இருப்பார்கள். ஆனால், நாம் பேசுவதை புரிந்துகொள்வதிலும், எல்லாருடனும் கலந்து பழகுவதிலும், பேசுவதிலும் இவர்களுக்கு சிக்கல் இருக்கும். ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை எத்தனை வயதில் கண்டுகொள்ளலாம்?பத்து மாதங்களில் இருந்தே கண்டு கொள்ளலாம். ஆனால், குழந்தையின் ஒன்றரை வயதிற்கு மேல், இலகுவாக அடையாளம் காண முடியும். பெண்குழந்தைகளை விட, ஆண்குழந்தைகளே இக்குறைபாட்டில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதன் அறிகுறிகள் என்னென்ன?இருபதிற்கும் மேற்பட்ட அடிப்படை அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக, ஒவ்வொரு குழந்தையும் பிறந்தபின், பல வளர்ச்சிப்படி நிலைகளைக் கடந்து தான் வளரவேண்டும். இந்த வளர்ச்சிப்படி நிலைகளில் ஏதாவது ஒன்றை தவற விட்டுவிட்டு, அடுத்ததிற்கு குழந்தை சென்றுவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. ஆட்டிசம் குறைபாட்டினை குணமாக்க மருந்துகள் உண்டா?இல்லை. இது வரையில் ஆட்டிசத்தை முற்றிலும் குணமாக்க எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆங்கில மருத்துவமோ, இந்திய மருத்துவ முறைகளோ அல்லது இதர மாற்று மருத்துவத்திலும்கூட இதை சரி செய்ய மருந்துகள் கிடையாது. ஏனெனில் இதை மருத்துவ உலகம் நோய் என்று சொல்லுவதில்லை. நோய்க்கு மட்டும் தான் சரி செய்ய மருந்துகண்டுபிடிக்க முடியும்; ஆட்டிசத்தை, குறைபாடு என்ற வகையில் தான் சேர்த்துள்ளனர். இதற்கு பயிற்சிகள் மட்டுமே உண்டு. ஒரு மனிதனுக்கு சர்க்கரை குறைபாடு வந்துவிட்டால் எப்படி முழுமையாக குணப்படுத்தமுடியாதோ, அதே போலத்தான் ஆட்டிசமும். சக்கரையை கட்டுக்குள் வைத்து நீண்ட நாட்கள் வாழமுடியும். ஆட்டிசமும் அப்படியே!இதரக்குழந்தைகளில் இருந்து இவர்கள் எவ்வாறு வேறுபட்டிருப்பர்?எப்போதும் தனிமை விரும்பியாகவே இருப்பர். மொழியில் பிரச்னை இருப்பதால் பிறரிடம் பேச கஷ்டப்படுவர். சிலர் பேசவே மாட்டார்கள். சிலர், பேசினாலும் அது வழக்கமான உரையாடல் போல் இல்லாது வேறுபட்டு தெரியும். மற்றவர்களோடு கலந்து பழகுவதில் விருப்பமிருக்காது. ஒரே மாதிரியான விஷயங்களை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பர்.புலன் உணர்வு பிரச்னைகள் கொண்டிருப்பதால், கைகளைத் தட்டுவது, ஆட்டுவது, குதிப்பது போன்ற தேவையற்ற செய்கைகளில் ஈடுபடக்கூடும். ஒரே மாதிரியான செயல்பாடுகளையே விரும்புவர் - மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சிரமப்படுவர். உதாரணமாக, வகுப்பறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து பழகிவிட்டால், வேறு இடம் மாறச் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். தினப்படி செய்கைகளில் வழக்கத்துக்குப் புறம்பான சிறு மாற்றத்தைக் கூட, அவர்களிடம் பல முறை சொல்லி, அவர்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும்.என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்கவேண்டும்..?ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருவிதம் என்பதால் இக்குழந்தைகளை நன்கு பரிசோதித்து, அதன் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பொதுவாக அனேக ஆட்டிசக் குழந்தைகளுக்கும், புலன் உணர்வு பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதை, சமநிலைக்கு கொண்டுவர, 'ஆகுபேஷன் தெரபி' உதவக்கூடும். அதுபோலவே சிறப்புக் கல்வியும், சிலருக்கு பேச்சுப்பயிற்சியும் கொடுக்கப்படவேண்டும். இது ஒவ்வொரு குழந்தையின் தேவையைப் பொறுத்து மாறுபடும். இதை குழந்தையின் பெற்றோரே தீர்மானிக்க முடியாது. துறைசார்ந்த வல்லுநர்களின் ஒத்துழைப்போடு அடுத்தகட்டத்தை நோக்கி பெற்றோர் முன்னேறவேண்டும்.ஆட்டிச குழந்தையோடு மற்ற குழந்தைகளை பழகவிடுதல் அவசியமா?கண்டிப்பாக. ஏனெனில், தொட்டால் ஒட்டிக்கொள்ளும் நோய் அல்ல ஆட்டிசம். இக்குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு மற்ற குழந்தைகளின் பங்களிப்பு முக்கியம். அவர்களுடன் கலந்து பழகுவது, சேர்ந்து விளையாடுவது, படிப்பது போன்ற செயல்களால் இக்குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும். மற்ற குழந்தைகளின் பெற்றோர் இதை அனுமதிக்க வேண்டும்.ஆட்டிச நிலைக் குழந்தைகள் சாதனையாளர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறதே?இது தவறு. எல்லா ஆட்டிச நிலைக் குழந்தைகளும் சாதனையாளர்கள் அல்ல. அவர்களில் சிலர் இசை, ஓவியம், புதிர், கணக்கு போன்ற துறைகளில் தனித்திறன் மிக்கவர்களாக உள்ளனர் அவ்வளவுதான்.ஆட்டிச நிலைக் குழந்தைகளிடம் மற்றவர்கள் எவ்வறு நடந்துகொள்ள வேண்டும்?இக்குழந்தை களையும், அவர்தம் பெற்றோரையும் ஒதுக்கிவிடாமல் நம்முடன் அரவணைத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இச்சமூகத்தில் எல்லாரும் சம உரிமையுடன் வாழ நம் சட்டத்தில் இடம் உண்டு. அதனால், இவர்களை புறந்தள்ளாமலும், இவர்களின் வலிகளை புரிந்து கொள்ளவும் முயலவேண்டும். மேலும், ஆட்டிசக் குழந்தைகளுடன் மற்றக் குழந்தைகள் கலந்து விளையாடவும், படிக்கவும் ஏற்பாடு செய்யவேண்டியது நம் எல்லாருடைய கடமையும் ஆகும்.- யெஸ்.பாலபாரதி.