என்ன படிக்கிறாய்...
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1990ல், 5ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு!பள்ளியில், 8ம் வகுப்பு ஆசிரியர் மனோகரன் மிகவும் கண்டிப்பானவர்; அவரைக் கண்டால் அலறி ஒடுங்குவர் மாணவர்கள். பள்ளி வளாகத்தை கண்காணிக்க, மதிய உணவுக்கு பின் வலம் வருவார்; ஆர்பரித்துக் கொண்டிருக்கும் வளாகம், உடனே அடங்கி அமைதியாகிவிடும்.அன்று, அவர் வருகை அறியாமல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தேன்; அருகே வந்ததும், திடுக்கிட்டு பக்கத்து வகுப்பறைக்குள், புகுந்தேன். அங்கிருந்தவர்களுடன் அமர்ந்து கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்து விரித்தேன். என் பின்னால் வந்தவர், 'என்ன படிக்கிறாய், காட்டு...' என்றார். அது, 1ம் வகுப்பு பாட புத்தகம். அதிர்ந்து நடுங்கியபடி நின்ற என்னை, 'அவ்வளவு பயமா... படிக்கும் வகுப்பு கூட தெரியவில்லையா...' என கூறி, சிரித்தார். அந்த சிரிப்பு, தடுமாற்றத்தை குறைத்தது. என் வகுப்பறைக்கு சென்றேன்; இதை நினைவு படுத்தி அடிக்கடி கிண்டல் செய்வர் தோழியர்.அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.- வெ.கவுரி, தேனி.