உள்ளூர் செய்திகள்

என்ன நடக்குது!

அது, முதியோர் இல்லம்!ஒரு அறையில், இரண்டு பேர் தங்கியிருந்தனர். இருவருமே நோயாளிகள். ஒருவருக்கு, முதுகுத் தண்டில் கோளாறு; எப்போதும் மல்லாந்து படுத்திருப்பார். எழுந்து அமர முடியாது.மற்றவருக்கு, நீரிழிவு நோய்; நடமாட முடியாது. அவரது படுக்கை, ஜன்னல் அருகே இருந்தது. எப்போதும், தெருவைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.நீண்ட நாட்கள் ஒரே அறைவாசிகள் என்பதால், நண்பர்களாகிவிட்டனர். அவர்களைத் தேடி யாரும் வருவதில்லை. தங்களுக்குள் பேசியபடி, பொழுதைக் கழித்தனர். படுக்கையிலிருந்தவர், 'வெளியே என்ன நடக்கிறது சொல்லுங்க...' என்றார். 'அருமையான பூங்கா; பக்கத்திலேயே, ஒரு விளையாட்டு மைதானம்; நிறைய குழந்தைகள் விளையாடுகின்றனர். நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். கவலை மறந்து போகும்...' என்றார், ஜன்னல் ஓர பெரியவர்.'தெருவில் நடப்பதை சொல்லுங்கள்; மனதுக்கு ஆறுதலாக இருக்கும்...' என்றார் படுக்கையிலிருந்த முதியவர்.மறுநாள் -'துாரத்தில், ஒரு கோவில் தெரிகிறது; ஏதோ உற்சவம் போலிருக்கிறது; வாண வேடிக்கை அமர்க்களப்படுகிறது...' என்றார், ஜன்னல் ஓர பெரியவர்.'பங்குனி மாதம் இல்லையா... உற்சவங்களுக்கு குறைச்சல் இருக்காது... கோவிலுக்கு சென்று, பல ஆண்டுகள் ஆகிறது; உடல் நலமானவுடன் போகணும்...' என்று உற்சாகமாக கூறினார் படுக்கையில் இருந்த பெரியவர்.ஒரு வாரத்திற்குப் பின், 'வட மாநிலங்களில் உள்ளது போல, மாப்பிள்ளை, குதிரை மீது போகிறான்; ஒரு வண்டியில், ஒளிரும் விளக்குகள் ஜொலிக்கின்றன; இசை மட்டும் இல்லை...' என்றார், ஜன்னல் ஓர பெரியவர். இதைக் கேட்டு, படுக்கையில் இருந்தவர் மகிழ்ந்தார்.மறுநாள், ஜன்னல் ஓர பெரியவர் திடீர் என சிரித்தார்.'என்ன...' என கேட்டார் படுக்கையிலிருந்தவர்.'ஒன்றுமில்லை... ஒரு பெண், மகனை அழைத்துப் போகிறாள்; ஐஸ் வண்டி வருகிறது; சிறுவன் ஐஸ் வாங்கி தரும்படி கேட்கிறான்... அம்மா மறுக்கிறாள்; ஐஸ் வண்டிக்காரன் அவர்கள் பின்னாலே போகிறான்... சிறுவன் அழுவதால், வேறு வழியில்லாமல் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறாள். அதைப் பார்த்தேன், சிரிப்பு வந்தது...' என்றார்.'சண்டை வந்தால், குழந்தைகள் தான் எப்போதும் ஜெயிப்பர்...' என்று கூறி, சிரித்தார் படுக்கையிலிருந்தவர்.ஒருநாள்-'இப்போது பூக்களின் காலம் போலிருக்கிறது; செடிகள் பூத்துக் குலுங்குகின்றன...' என்று கூறியவர், திடீர் என, படுக்கையில் சாய்ந்து, அழைப்பு மணியை அழுத்தினார்.ஊழியர்கள் ஓடி வந்தனர்; மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் திரும்பி வரவில்லை.'என்ன ஆயிற்று அவருக்கு...' என்று கேட்டார், படுக்கையிலிருந்தவர். 'இறந்துட்டாருங்க...' என்றார் ஊழியர்.படுக்கையிலிருந்தவருக்கு இதயம் கனத்தது. நண்பரை இழந்து விட்டோமே என வருந்தி, 'அந்த ஜன்னல் பக்கம், என் படுக்கையை நகர்த்திப் போடுங்க...' என கேட்டுக் கொண்டார்.படுக்கையை நகர்த்தியதும், சிரமத்துடன் முழங்கையை ஊன்றி, ஜன்னல் வழியே பார்த்தார். அங்கே, ஒரு சுவர் தான் தெரிந்தது. மிகவும் உயரமான சுவர்! அதற்கு அப்பால், எதுவும் தெரியவில்லை. அவர் திகைத்துப் போனார்.ஊழியரிடம், 'இங்கே இருந்த பெரியவர், வெளியே என்னென்னவோ தெரிவதாக சொல்லிக் கொண்டிருந்தாரே... வெறும், சுவர் தானே தெரிகிறது...' என்றார்.'உங்களை உற்சாகப்படுத்த, கற்பனையில் சொல்லியிருப்பார்... உங்களுக்காவது சுவர் தெரிகிறது; அவருக்கு அதுவும் தெரிந்திருக்காது...' என்றார்.'ஏன்...''அவர் பார்வை இழந்தவர்...' என்று, பதிலளித்தார் ஊழியர்.குட்டீஸ்... ஒருவரை மகிழ வைப்பதும் உயர்ந்த சேவை தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !