யார் இவர்
சென்னை மெரினா கடற்கரை. கடந்த, 1920ல், ஒரு நாள், மாலை நேரம்.மனைவியுடன் வந்திருந்தான் கவிஞன். மணல் வெளியில் எதிர் காலம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் மக்கள். கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டனர் முதியவர்கள். சுண்டல், முறுக்கு விற்பனைக்காக ஓடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். கவிஞனுக்கு எதன் மீதும் கவனம் பதியவில்லை.கடல் மீது மிதப்பது போல், காட்சி தந்தது ஆதவன். எதையோ தேடி வந்து, கிட்டாமல் திரும்பியது போல் பாய்ந்தன அலைகள். கடல் நீரை தழுவிய பின், மணல் வெளியில் அமர்ந்திருந்தவர்களை தொட்டுச் சென்றது மெல்லிய காற்று.ரம்மியம் அங்கே அரசாட்சி நடத்திக் கொண்டிருந்தது.இச்சூழல், கவிஞன் மனதில் புத்தொளி பாய்ச்சியது. அது, பாடலாக வெளி வந்தது. அந்த பாடலை கேட்டு ரசித்த சிலர், கவிஞனை சூழ்ந்தனர்; தலையாட்டி ரசித்தனர். அது மேலும் மேலும் அவனைப் பாட வைத்தது. அங்கே ஒரு இசைக் கச்சேரியே நடந்தது.இப்படி ஒரு மணி நேரம் நகர்ந்தது. இச்சூழலில் ஒரு மெல்லிய பாட்டோசை கேட்டது; பாடிக் கொண்டிருந்த கவிஞன் நிறுத்தினான். அவன் மனதை அந்த குரல் பாதித்தது; மெல்ல எழுந்தான். பாட்டோசை வந்த திசையில் நடந்தான். சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவன் பின்னால் அணிவகுத்தனர். படகில் அமர்ந்திருந்தான் ஒரு மீனவன்; கண் மூடி பாடிக் கொண்டிருந்தான். அவன் முன் அமர்ந்தான் கவிஞன்; அவனைத் தொடர்ந்து அனைவரும் சூழ்ந்தனர். மீனவன் பாடியதை எழுத துவங்கினான் கவிஞன்.பாடல் முடிந்தது.கண்களை திறந்தான் மீனவன்; கூட்டத்தைக் கண்டு வெட்கி நின்றான். அப்போது, 'தம்பி... எவ்வளவோ பாடல்களை கேட்டிருக்கிறேன்; அவை எல்லாம் கவர்ந்ததில்லை. உன் பாடலில் ஜீவன் இருப்பதை கண்டேன். எதையும் ஈடுபாட்டோடு செய்யும் போது மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். அதை உன் பாடலில் கண்டேன். நீ தான் என் குருநாதர்...' என்றான் கவிஞன். மீனவனும், மற்றவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அப்போது, 'கலை எவரிடத்திலும் குடியிருக்கலாம். அதற்குப் படிப்பு, பட்டம் எதுவுமே தேவையில்லை; அந்தஸ்தோ, அதிகாரமோ தேவையில்லை. 'இந்த மீனவர் குரலில் வந்த பாடல் என் உள்ளத்தைக் கவர்ந்தது. அதனால் தான், குருநாதராக ஏற்றுக் கொண்டேன். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை...' என்றான் கவிஞன்.இவர்தான்: கவிஞர் பாரதி; மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தேசிய மகாகவி!