யார் அழகு?
ஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று அமர்ந்து, 'கா கா' என்று கரைந்து கொண்டிருந்தது. பஞ்சவர்ணக் கிளி ஒன்று காகத்தின் அருகே சென்று அமர்ந்தது.“காக்கையாரே! உம் இறக்கையை பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இவ்வளவு அழகில்லாத, அருவருப்பை தரக்கூடிய இறக்கையை நீர் பெற்றிருக்கிறீரே... உமக்கு வெட்கமாக இல்லையா...” என்று ஏளனமாக கேட்டது கிளி.“நான் ஏன் வெட்கப் பட வேண்டும்... கறுப்பு கூட அழகு தான். கறுப்பு நிறம் அழகற்றது என்றால், கடவுள் அந்த நிறத்தை படைத்திருப்பாரா?” என்று கேட்டது காகம்.“ஒரு சிறந்த அழகு என்பதற்காக கடவுள் கறுப்பு நிறத்தை படைக்கவில்லை. மற்ற அழகான நிறங்கள் எவ்வளவு உயர்ந்தவை என்பதை ஒப்பிட்டு பார்க்கத்தான் அந்த மோசமான நிறத்தை கடவுள் படைத்திருப்பார். ''இப்போது என் இறக்கையையும், உன் இறக்கையையும் சேர்த்து பார்க்கும் போது, என் இறக்கையின் அழகு பளிச்சென்று தெரிகிறது அல்லவா...” என்று தன் இறக்கையின் அழகை தானே பாராட்டி கொண்டது பஞ்சவர்ணக் கிளி.அந்தச் சமயத்தில், அந்தப் பக்கமாக வந்த புறா, “நீங்கள் இரண்டு பேரும் ஏதோ சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே...” என்றது.“நல்ல நேரத்தில் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். எங்கள் இருவருடைய இறக்கையின் அழகை பார்த்து, யாருடைய இறக்கை அழகாக இருக்கிறது என்று நீங்களே கூறுங்கள்,” என்றது பஞ்சவர்ணக்கிளி.“கொஞ்சம் கூட அறிவுக்கு பொருத்தமில்லாத சர்ச்சை இது. கடவுள், உலகத்தில் உயிரினங்களுக்கான எந்த உறுப்பையும் பயன் இல்லாமல் படைப்பதில்லை. ஒவ்வொருவருடைய உடல் உறுப்புகளும், ஒவ்வொரு வகையில் சிறந்தவையாக தான் உள்ளன.“பஞ்சவர்ணக்கிளியே! உன் இறக்கை பகட்டாக அழகாக இருக்கலாம். ஆனால், காகம் போன்று விரைவாகவும், ஒரே சமயத்தில் நீண்ட தூரமும் உன்னால் பறக்க முடியாது. கோடை நாட்களில் உன் இறக்கைகள், உனக்கு அதிக பயன் தருவதாக இருக்கும். குளிர், மழைக் காலத்திலோ காக்கையின் இறக்கை தான் உடலுக்கு இதமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். ''ஆகவே, உயிரினங்களின் அழகை பற்றி மட்டுமே பேச கூடாது; அவற்றின் பயனை பற்றி தான் பேச வேண்டும். பயன் இல்லாதது என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அவ்வாறு பயன் உள்ள உறுப்புகளை நமக்கு அளித்தமைக்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்,” என்றது புறா.உண்மையை புரிந்து கொண்டு, காகத்திடம் மன்னிப்பு கேட்டது கிளி.உங்க அழகில் பெருமைப்பட்டு அழகில்லாதவர்கள் என, சிலரை கேலி செய்யாதீங்க குட்டீஸ்... அது அவர் களை படைத்த இறைவனையே கேலி செய்வதற்கு சமம்.