மூட நம்பிக்கை!
கேரள மாநிலம், மலப்புறம், மஞ்சேரி உயர்நிலைப் பள்ளியில், 1953ல், 8ம் வகுப்பு படித்தேன். என் அண்ணனும், அதே வகுப்பில் படித்தார். அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நண்பர், 'நெற்றியில், ஆள்காட்டி விரலால் மேலும், கீழுமாக பலமாக, 108 முறை உராய்ந்தால் கடவுளை நேரில் பார்க்கலாம்; படிப்பும் நன்றாக வரும்...' என்றார்.அதை நம்பிய அண்ணன், அவருடன் சேர்ந்து இதுபோல் செய்து கொண்டிருந்தார்.நண்பர், 25 முறை தேய்ததும் கடுமையாக வலிக்கவே நிறுத்திவிட்டார். ஆனால், நிறுத்தாமல் தொடர்ந்த என் அண்ணன் நெற்றி வீங்கி, கடும் வலி எடுக்க ஆரம்பித்தது. மாலை வீட்டுக்கு வந்ததும், அவன் நிலை கண்டு, அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஆத்திரத்துடன், 'வாடா... கடவுளை நான் காட்டித் தருகிறேன்...' என்றபடி, பிரம்பால் விளாசி தள்ளினார். தடுக்க வந்த அம்மாவுக்கும் அடி கிடைத்தது. கோபம் தணிந்த பின் சமாதானமாக, 'படிப்பு வர வேண்டுமென்றால், மூட நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்; கடவுள் மீது, நம்பிக்கை கொண்டு மனம் தளராமல் படிக்க வேண்டும். அப்படி முயற்சி செய்...' என்றார்.இப்போது என் வயது, 82; பல்லாண்டுகள் கடந்த பின்னும், அச்சம்பவத்தை எண்ணியவுடன் சிரித்து விடுகிறேன்.- சாவித்திரி, சென்னை.தொடர்புக்கு: 91762 66889