உள்ளூர் செய்திகள்

எமன் வர்றான்!

மன்மத நாட்டை ஆண்டு வந்த மன்னன் தில்லைமணி, மிகுந்த பேராசை பிடித்தவன். அக்கம்பக்கமுள்ள சிறிய நாடுகள் மீது படையெடுத்து, தன் வசமாக்கி கொண்டான். அவர்களின் கஜானாக்களில் இருந்து வைரம், நவரத்தினக் கற்கள் போன்ற செல்வங்களை கொள்ளையடித்தான். அந்நாட்டு மக்களுக்கு அதிக வரி விதித்தான்; சொத்துக்களையும் சூறையாடினான்; ஆனாலும், அவனது பேராசை தீரவில்லை. மேலும், மேலும் சொத்துக்களை குவிப்பதிலேயே கவனமெல்லாம் இருந்தது.தன் நாட்டு மக்கள் படும் துயரத்தை, கண்டு கொள்ளவே இல்லை; மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. மக்கள் அனைவரும், மன்னன் தில்லைமணி மீது கோபம் கொண்டபோதும், கலகம் செய்ய துணிவில்லாமல் இருந்தனர். ஒருநாள்-தெய்வீக சக்தி பெற்ற சாது ஒருவர், மன்மத நாட்டுக்கு விஜயம் செய்தார். மக்கள் அவரை வரவேற்று வணங்கினர். அவர்களின் முகம் வாட்டமாக இருப்பதை கண்ட சாது, அதற்கான காரணத்தை கேட்டார். தங்கள் மன்னனின் பேராசையையும், அதனால் தாங்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும் கூறி கண்ணீர் வடித்தனர். தங்களை, இக்கொடுங் கோலனின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கெஞ்சினர்.“கவலையை விடுங்கள்... நீங்கள் படும் துன்பத்திலிருந்து உங்களை விடுவிக்கிறேன்,” என்று உறுதி கூறி, மன்னனை காண சென்றார்.ஒரு மகான் தன்னை காண வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அவரை வரவேற்றான் மன்னன். சில நாட்கள், தன்னுடன் தங்க வேண்டும் என்றும் வேண்டி கொண்டான்.சாதுவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்படி அமைச்சரிடம் உத்தரவிட்டான்.“மன்னா... நான் ஒரு துறவி. எனக்கு ஏன் இந்த ஆடம்பர ஏற்பாடுகள்... நான் தங்குவதற்கு சாதாரண குடிலும், எளிய உணவும் போதும்,” என்றார்.“சுவாமி... தாங்கள் அப்படி சொல்ல கூடாது. உங்களுக்கு செலவழிப்பதால் நான் ஒன்றும் குறைந்து விடமாட்டேன். பல நாடுகள் என் வசம் உள்ளன; கஜானாவும் நிரம்பி வழிகிறது. குபேரனே என்னுடைய அடிமை!” என்று இறுமாப்போடு கூறினான்.அதை கேட்ட சாதுவின் முகம் வாடியது. “சுவாமி... ஏன் ஒரு மாதிரியாக உள்ளீர்கள்... எனக்கு ஆணையிடுங்கள். உங்களுக்கு எதுவும் செய்ய தயார். கஜானா முழுவதையும் கூட திறந்து விடுகிறேன்...” என்றான் மன்னன்.“மன்னா... உன் பெருந்தன்மைக்கும், உபசாரத்துக்கும் நன்றி; ஆனால்...”“என்ன சுவாமி... ஏன் தயங்குகிறீர்கள்? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்!”“மன்னா... சொல்வதற்கு என் நாவே நடுங்குகிறது... எப்படி சொல்வேன்... இருப்பினும் கேள் உன்னை ஒரு ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது!”“சுவாமி... ஆபத்தா... எனக்கா... என்ன சொல்கிறீர்கள்... என்னை பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். நான் எந்த ஆபத்தையும் முறியடிப்பேன். கவலையை விடுங்கள்...” என்றான் தில்லைமணி.“மன்னா... கடவுளின் செயல் முன், உன் பொன்னும், பொருளும், பதவியும் என்ன செய்ய முடியும். உன் ஆயுள் இன்னும், இரண்டு நாட்களில் முடிய போகிறது. எமன் உன்னை தேடி வந்து கொண்டிருக்கிறான். இந்த தேவரகசியத்தை நினைத்து தான் வருந்துகிறேன்...” என்றார் சாது.சாது கூறியவற்றை கேட்ட தில்லைமணி, மிகவும் பயந்து போனான். இன்னும் இரண்டு நாட்களில், தன் உயிர் போகப் போகிறதா... என்ன செய்வேன்! நான் எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளேன். வைரமும், நவரத்தினக் கற்களும் என்னுடைய அரண்மனையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நான் இறந்த பின், யார் அனுபவிப்பர்... என்ற சிந்தனையிலேயே தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான்.அடுத்த நாள்-இரவு முழுவதும் தூங்காததால், கவலை தோய்ந்த முகத்தோடு காணப்பட்டான். மன்னனுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் அமைச்சர்களும், மக்களும் மனம் கலங்கினர்.நாளை எமன் என்னை தேடி வருவானோ... என்ற பயம் மன்னனுக்கு ஏற்பட்டது. உடனே சாதுவிடம் ஓடினான்.“நான் உயிர் வாழ்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா...” என்று கேட்டான் மன்னன்.“மன்னா பொன்னும், பொருளும் நமக்கு இறுதிவரையில் வாராது. நாம் செய்யும் அறமும், மற்றவருக்கு செய்யும் உதவியும் தான் நம்மை நீண்ட காலம் வாழ செய்யும்; எமனும் நம்மிடம் வர அஞ்சுவான்,” என்று கூறினார்.மன்னன் தன் உயிருக்கு பயந்து தன்னிடம் உள்ள பொருட்களை மக்களுக்கு வாரி வழங்கினான்.மக்கள் மன்னனை மகிழ்ச்சியோடு பாராட்டினர்; நெடுநாள் வாழ வாழ்த்தினர். அரசனும் மகிழ்ந்தான்; எமபயம் நீங்க பெற்றான். தன் அறிவாற்றலால் மன்னனின் மனதை மாற்றிய சாதுவுக்கு நன்றி கூறினர் மக்கள்.நீதி: குட்டீஸ்... பேராசைபட்டு எல்லா பொருட்களையும் நீங்களே சேர்த்து வச்சிக்காதீங்க. எல்லாருக்கும், 'ஷேர்' பண்ணிக்கோங்க. அது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !