ஏப்ப ரகசியம்!
உணவு உண்டதும் ஏப்பம் வருவது உடலில் இயல்பான செயல்களில் ஒன்று. வயிறு நிறையச் சாப்பிட்டால் ஏப்பம் வரும். ஒரு நாளில், ஓரிரு முறை ஏப்பம் வந்தால், பிரச்னை இல்லை. அடிக்கடி அதிக சத்தத்துடனும், தொடர்ச்சியாக வந்தால், வயிற்றில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஏப்பம் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம்...சாப்பிடும் போது, உணவுடன் சிறிதளவு காற்றையும் விழுங்குகிறோம். இரண்டும், இரைப்பையை அடைகின்றன. சில நேரம் காற்று அதிகமாக உள்செல்லும். குறிப்பாக, அவசரமாகவோ, பேசியபடியோ உண்ணும் போதும் இப்படி நடக்கும். செயற்கை குளிர்பானங்கள் குடிக்கும் போதும் இதுபோன்ற நிலை ஏற்படும். இதற்கு, 'ஏரோபேஜியா' என்று பெயர்.உணவு குழாயின் இரு முனைகளிலும் சுருக்கு தசையால் கதவுகள் உள்ளன. உணவை விழுங்கும் போது, அது மூச்சுக்குழாய்க்குள் செல்வதை மேல் முனையில் இருக்கும் கதவு தடுக்கிறது. இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேல் நோக்கி, உணவு குழாய்க்குள் நுழைய விடாமல் கீழ்முனை கதவு தடுக்கிறது. இவை இரைப்பையை காப்பது போல் செயல்படுகின்றன. உணவுடன் விழுங்கிய காற்று, செரித்த உணவுடன் சிறு குடலுக்கு சென்று விடுகிறது. காற்றின் அளவு அதிகமாக இருந்தால், வயிறு உப்பிக் கொள்ளும். இரைப்பையில் அழுத்தம் அதிகமாகும். அதை வெளியேற்ற உதர விதானம் இரைப்பைக்கு அழுத்தம் தரும். இதை ஈடுகட்ட, இரைப்பை தசை மேல் நோக்கி எழும்.அதீத அழுத்தத்தை தாங்க முடியாமல், உணவுக்குழாயின் மேல்முனை கதவு திறந்து கொள்ளும். அபரிமிதமாக இருக்கும் காற்றை ஒருவித சத்தத்துடன் வாய் வழியாக இரைப்பை வெளியேற்றும். இதைத் தான், ஏப்பம் என்பர்.ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்க...* அவசரமாக சாப்பிடக் கூடாது* சாப்பிடும் போது, பேசக்கூடாது* உணவை மென்று விழுங்க வேண்டும். புளிப்பு, காரம் மற்றும் கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.ஆவியில் வெந்த உணவு வகைகள் அதிகம் சாப்பிடலாம். உணவு முறையை சரி செய்தால் ஏப்பத்தை தவிர்க்கலாம்!- பி.சி.ரகு