இரண்டுக்கு போய்விட்டாயே!
நான், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம். என் வகுப்பறையில் ஒரே பெயர்களில் இருவர், மூவர் இருப்பதால், வகுப்பாசிரியர் ஒவ்வொருவரையும் கூப்பிடுவதற்கு, ஒரு நடைமுறையை கொண்டு வந்தார்.அதாவது, அந்தந்த மாதங்களில், அவரவர் தேர்ச்சி அறிக்கையை வைத்து, 'ஒன்று, இரண்டு...' என்று அழைப்பார்.என் நண்பன், காலாண்டு தேர்வுக்கு முன் நடந்த இரு தேர்வுகளிலும் முறையே, நான்கு மற்றும் ஒன்றாம் ரேங்க் அளவில் தேர்ச்சி பெற்றான்.ஆனால், காலாண்டு தேர்வில், இரண்டாம் இடத்தை பிடித்தான்.என் வகுப்பாசிரியர், காலாண்டு தேர்ச்சி விபரத்தை கூறி கொண்டிருந்தார். என் நண்பனிடம், 'முதலில், நான்கில் இருந்தாய்; இரண்டாவதாய், ஒன்றுக்கு வந்தாய்; இப்போது, இரண்டுக்கு போய் விட்டாயே...' என்று கூறினார்.உடனே என் நண்பன், 'டீச்சர் நான், இரண்டுக்கும் போகவில்லை. ஒன்றுக்கும் போகவில்லை. வேண்டும் என்றால், என் ஆடையை பரிசோதித்து பாருங்கள்...' என்றான் அப்பாவியாக!வகுப்பறையில், ஒரே சிரிப்பலை; ஆசிரியரும் சிரித்து விட்டார். அதை இப்போது நினைத்தாலும், சிரிப்பு வருகிறது.- ஜி.சுந்தரமூர்த்தி, மதுரை.