அண்ணன கொன்னுட்டீங்களே...
நான், 1960ல், திருச்செந்துார், பூச்சிக்காடு கிராமத்து இந்து ஆரம்ப பாடசாலையில், ஏழாம் வகுப்பு படித்த போது, நடந்த சுவையான சம்பவம்!சமூக அறிவியல் பாட ஆசிரியர் சற்குணராஜ் சிறந்த ஆசிரியர்; கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் வல்லவர். பள்ளியில், ஒவ்வொரு மாதமும் மாணவர் மன்றம் நடைபெறும். அப்போது, கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்; அன்று, பண்ணையாராக கணேசன் என்ற மாணவனும், வேலைக்காரனாக நானும் நடித்தோம்.பண்ணையார் செய்த குற்றத்திற்காக, நன்றியுள்ள வேலைக்காரன் பழியை ஏற்று, சிறை செல்வான். வேலைக்காரன் குடும்பத்தை கவனிப்பதாக வாக்களித்த பண்ணையார் கவனிக்கவில்லை. சிறையிலிருந்து, பண்ணையார் வீட்டுக்கு, கத்தியுடன் வருவான் வேலைக்காரன்.'பழிவாங்க வந்திருக்கிறேன்...எந்த நெஞ்சம் அன்பின் சிகரமாக, உன் போன்றோருக்காக, உயிரையும் தியாகம் செய்ததோ... அதே நெஞ்சம் தான் இன்று கொலை செய்ய, உம் முன் நிற்கிறது... வாங்கிக் கொள்...' என்று, கத்தியால் குத்தினேன்.பண்ணையார் தன் மார்பில் மறைத்து வைத்திருந்த, சிவப்பு சாய முட்டையை தெரியாமல்அழுத்த, ரத்தம், 'குபு குபு' என்று வர கீழே சாய்ந்தார் பண்ணையார்!நாடகம் பர்த்துக் கொண்டிருந்த கணேசனின் தங்கை, 'என் அண்ணன கொன்னுட்டீங்களே...' என்று கதற ஆரம்பித்து விட்டாள். அவளை சமாதானப்படுத்த பெரும் பாடா போச்சு. அதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. தற்போது, என் வயது, 73.- எஸ்.சிசுபாலன், மதுரை.