உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இப்படியும் ஒரு திருவிழா!

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவது, பாவத்தை தொலைக்க, புண்ணிய தலங்களில் நீராடுவது போன்ற நம்பிக்கைகள், நம்ம ஊர் மக்களிடம் உள்ளது. சீனர்கள் மட்டும், நம்மவர்களுக்கு சளைத்தவர்களா? அவர்களிடமும், இதுபோன்ற ஏராளமான நம்பிக்கைகள் புரையோடிப் போய் இருக்கின்றன. சீனாவின், சிசுவான் மாகாணத்தில், சுஸ்குய் என்ற நகரம் உள்ளது. இங்கு, ஆறு ஒன்றின் குறுக்கே கட்டப்பட்ட, 200 ஆண்டு பழமையான பாலம் ஒன்றும் உள்ளது; இதன் பெயர், தாய்பிங் பாலம்.ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 24 ம் தேதி, இந்த பாலமும், அதன் சுற்றுப் புறமும் களை கட்டி விடும். சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, சீனா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள், இங்கு, தங்களது குடும்பத்தினருடன் கூடுவர். பாலத்தின் மீது ஏறி நின்று, கையோடு, தாங்கள் கொண்டு வந்த பழைய ஆடைகளையும், நாணயங்களையும், ஆற்று நீரில் வீசி எறிந்து விட்டு, ஊருக்கு திரும்புவர். குறிப்பிட்ட அந்த நாளில், தாய்பிங் பாலம், திருவிழா கோலம் பூண்டிருக்கும்.அது சரி... பழைய உடைகளையும், நாணயங்களையும், ஆற்று நீரில் வீசி எறிந்தால் என்ன கிடைக்கும் என்று தானே கேட்கிறீர்கள்? 'நோயற்ற, மகிழ்ச்சியான வாழ்வு வேண்டுமானால், உடைகளையும், நாணயங் களையும் வீசி எறிய வேண்டும் என்பது, எங்களின் முன்னோர் நம்பிக்கை; அதைத் தான் நாங்கள் பின்பற்றுகிறோம்...' என்கின்றனர் சீன மக்கள். மார்ச் மாதம் நடந்த இத்திருவிழாவில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சம்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !