உள்ளூர் செய்திகள்

மிக நீளமான பாம்பு!

தற்காலத்தில், 21 அடி, 41 அடி, 77 அடி என, அமைக்கப்படும் உயரமான சிலைகளைப் பார்த்து பிரமிக்கிறோம். 10 கி.மீ., நீளத்தில் ஒரு நாக கன்னி பாம்பு சிலை பற்றி கேள்விப்பட்டால், ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. விழுப்புரம் மாவட்டம், தும்பூர் நாக கன்னியம்மன் கோவிலில், இந்த சிலையின் தலை மற்றும் உடல் பகுதியையும், இங்கிருந்து, 10 கி.மீ., துாரத்திலுள்ள திருவாமத்துார் அபிராமேஸ்வரர் கோவிலிலுள்ள முத்தாம்பிகை சன்னிதியில், வால் பகுதியையும் காணலாம்.திருவாமத்துாரில் வசித்த ஒரு அண்ணன், தன் தம்பியின் சொத்தைப் பறித்துக் கொண்டான். சொத்தை விற்று, அதற்கு ரத்தினக் கற்கள் வாங்கி, தம்பிக்கு தெரியாமல் ஒரு ஊன்றுகோலில் போட்டுக் கொண்டான். சொத்து தகராறு பற்றி, அரசனிடம் புகார் கூறினான், தம்பி. அண்ணனை அழைத்து, அரசன் விசாரித்த போது, 'நான், அவனது சொத்துக்களைப் பறித்து விற்றிருந்தால், என் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ தானே பணத்தை வைத்திருக்க வேண்டும்... நீங்கள் வேண்டுமானால் சோதனை போட்டுக் கொள்ளுங்கள்...' என்றான்.சோதனையிட உத்தரவிட்டான், அரசன். தன் ஊன்றுகோலைக் கூட, தம்பி கையில் கொடுத்து, அப்பாவியாய் நின்று கொண்டிருந்தான், அண்ணன்; பொருளேதும் சிக்கவில்லை.அவ்வூரிலுள்ள திருவட்டப்பாறையில் வைத்து தான், வழக்குகள் நடக்கும். யாராவது பொய் சொல்வதாகக் கருதினால், அதன் மீது ஏறச்சொல்லி சத்தியம் செய்யச் சொல்வர். பொய் சத்தியம் செய்தால், பாறையின் கீழிருக்கும் பாம்பு சீறி வந்து, சத்தியம் செய்தவனை கொன்று விடும் என்பது, மக்களின் நம்பிக்கை.'என் அண்ணனை, அவ்வாறு சத்தியம் செய்யச் சொல்லுங்கள்...' என்றான், தம்பி.சற்றும் கலங்காத அண்ணன், 'பாம்பாவது ஒன்றாவது, என்னிடம் உண்மை இருக்கிறது...' என்றபடியே, பாறையில் ஏறினான். கண்ணிமைக்கும் நேரத்தில் வெளிப்பட்ட பாம்பு, அவன் மீது பாய்ந்தது. அவன் ஓடினான். 10 கி.மீ., தொலைவுக்கு மேல், அதன் உடல் நீண்டபடியே வந்தது; ஓரிடத்தில் அவனைக் கொன்றது. அவன் இறந்த இடமே, தும்பூர். அங்கு, தலையும், திருவாமத்துாரில், வாலும் தற்போது தெரிகிறது. உடல் பகுதி, தும்பூர் கோவில் அருகில் ஓரளவு தெரிகிறது. உடலின் பெரும்பகுதி, கால வெள்ளத்தில் மணலில் புதைந்து விட்டது.தும்பூரில் உள்ள தலைப் பகுதியே, நாக கன்னியாக வழிபடப்படுகிறது. அதன் உடல் பகுதி, அருகிலுள்ள வயலில் தெரிகிறது. வால், திருவாமத்துார் கோவிலிலுள்ள முத்தாம்பிகை அம்மனின் உடலிலும் சுற்றியுள்ளது. நாகர்கோவிலில், நாகராஜா மூலவர் போல, தும்பூரில், நாக கன்னி மூலவராக இருக்கிறாள்.சித்திரை மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் காணும் பொங்கல் ஆகியவை, விழா நாட்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரையும், மற்ற நாட்களில், காலை - மாலை சிறிது நேரமும் கோவில் திறந்திருக்கும்.விழுப்புரம் - செஞ்சி சாலையில், 10 கி.மீ., துாரத்தில் தும்பூர் விலக்கு உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., சென்றால், கோவிலை அடையலாம். இதே சாலையில், 3 கி.மீ., துாரத்திலுள்ள முத்தம்பாளையத்தில் இருந்து பிரியும் சாலையில், 3 கி.மீ., சென்றால், திருவாமத்துார் அபிராமேஸ்வரர் கோவிலிலுள்ள முத்தாம்பிகை சன்னிதியில் வாலைத் தரிசிக்கலாம். தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !